Rajinikanth J

June 27, 2021

நடுநிலைமை

சமீபத்தில் நண்பர் ஒருவர் ஒரு வாட்ஸ் ஆப் குழுமத்தில் ஒரு கருத்தை பற்றி எழுதும் போது நடுநிலை என்பது வாய்ப்பே இல்லை, ஒரு பக்க சார்பு எடுத்தே ஆக வேண்டும் என்று கூறி இருந்தார்.  எனக்கு அது ஒரு விதத்தில் உண்மைதான் என்று தோன்றியது. ஆனால்  அவர் எப்போதும் ஒரு பக்க சார்பு நிலையில் இருந்து பேசக்கூடியவர். நான் அதற்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு கூறினேன், “நடு நிலைமை என்பதை நீங்கள் எப்படி புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று தெரிய வில்லை. நடு நிலைமை என்பது ஒரு நடுவர் போலத்தான். நன்றாக விளையாடும் அணி வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பது. இன்று நீங்கள் நன்றாக விளையாடினால் நீங்களே வெற்றி பெற்றவர், நாளை வேறு ஒருவர் நன்றாக விளையாடினால் அவருக்கு தான் வோட்டு. நல்ல விளையாட்டுக்கு தான் அதரவே தவிர விளையாடும் மனிதர்களுக்கு அல்ல” என்று.  என் கருத்து என்னவென்றால் ஒரு பிரச்சினை சார்ந்து இரண்டு தரப்பு இருக்கும்போது அதில் எந்தத் தரப்பு நியாயமோ அதை ஆதரிப்பது. பிரச்சனை சார்ந்தும் அந்த இரு தரப்புகளின் நடவடிக்கை சார்ந்தும் தான் சொல்ல முடியுமே தவிர, ஒரு பக்கமாக நின்று கொண்டு தான் ஆதரிக்கும் தரப்பு என்ன செய்தாலும் அதை வளைத்து, ஒடித்து, மடித்து நியாயம் சொல்வது நடுநிலைமை ஆகாது. அதேபோல் கருத்து சொல்லாமல் ஒதுங்கி இருப்பதும் நடுநிலைமை ஆகாது என்பதுதான்.   திரு சுபவீ அவர்கள் ஒரு காணொளியில் பேசும் போது ஒருவன் இன்னொருவனை போட்டு அடித்தால் ஒன்று அடி வாங்குபவனுக்கு சாதகமாக பேசுவது, இல்லையென்றால் அடிப்பவனுக்கு சாதகமாக பேசுவது இது இரண்டு தான் உண்டு. அதில் நடுநிலைமை என்று ஒன்றுமில்லை, நீ பேசாமல் இருந்தாலே அடிப்பவனுக்கு சாதகமாகத்தான் இருக்கிறாய் என்று அர்த்தம் ஆகிவிடுகிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆம் அது உண்மைதான். எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் அதற்கு அதுதான் அர்த்தம்.

பின்னர் ‘நடுநிலைமை’ என்ற வார்த்தைக்கு விக்கிப்பீடியாவில் பார்த்தபோது அதன் அர்த்தம் இப்படி இருந்தது.

  • மத்தியநிலைமை
  • நியாசம்
  • மத்தியஸ்தம்

இந்த வார்த்தைகள் எதுவுமே ஒரு விஷயத்தில் கருத்து சொல்லாமல் இருப்பதை “நடு நிலைமை” என்று சொல்வதில்லை. ஆனால் நாம் எந்த கருத்தும் சொல்லாமல் இருப்பவர்களை நடு நிலைமையாளர்கள் என்று அர்த்தப்படுத்தி கொள்கிறோம். அப்படி கருத்து சொல்லாமல் இருப்பவர்களில் ஒரு தரப்பினர் அந்த விஷயத்தில் ஆர்வம் இல்லாதவர்கள் என்றோ அல்லது அதை பற்றி கவலை படாதவர்கள் அல்லது ஒதுங்கிப்போகும் தன்மை கொண்டவர்கள் என்றோ எடுத்து கொள்ளலாம்.

சரி, மீதம் இருப்பவர்களில் கருத்து சொல்லாமல் இருப்பவர்களுக்கு உண்மையிலேயே ஒரு பிரச்சனை சார்ந்த எந்த கருத்துமே இல்லையா என்று யோசித்துப் பார்த்தால் அவர்களுக்கும் இருக்கும். ஆனால் அதை வெளியில் சொல்ல தயங்குவார்கள். பெரும்பான்மையான மக்கள் தாம் நினைக்கும் கருத்தை வெளியில் சொல்ல தயங்க பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கும்.

ஒன்று – அவர்களின் கூச்ச சுபாவம், 

இரண்டு – கருத்து சொல்வதில் என்ன பிரச்சனை என்றால் நமக்கு நியாயமாக தோன்றும் ஒரு கருத்தை சொல்லிவிட்டால், அந்த இரண்டு தரப்பில் தான் யாருக்கு எதிராக பேசி இருக்கிறோமோ அவர்களின் வசைகளை வாங்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் நடுநிலையில் இருந்து நீங்கள் எந்த கருத்தை நியாயம் என்று சொன்னாலும் அதற்கு எதிர் பக்கத்திலிருந்து வசை பாடப்படுவீர்கள்.  இதனால்தான் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்குத் தோன்றும் கருத்தை பொது வெளியில் சொல்வதில்லை என்று நினைக்கிறேன். அவ்வாறு இரண்டு தரப்பிலும் நின்று வசை மொழியில் பேசுபவர்களை பார்க்கும்போது, இந்த இரண்டு வசை பாடும் தரப்புமே சிந்தனை அளவில் ஒரே இடத்தில் நின்று கொண்டு வெவ்வேறு திசை நோக்கி பார்ப்பவர்கள் என்பது தெரிந்துவிடும்.

ஒரு ஜனநாயக சூழ்நிலையில் ஒருவர் தன் கருத்தை முன்வைக்கும் போது அதற்கு எதிர்வினையாக வசை சொல்லில் பேசுவது எவ்விதத்திலும் நியாயம் அல்ல.

எனக்கு தெரிந்து ஜனநாயகத்தில் பெரும்பான்மையான மக்கள் நடு நிலைமையில் இருப்பதுதான் நியாயம் என்று படுகிறது.

 உதாரணத்திற்கு இன்று தமிழகத்தில் இருக்கும் இரண்டு பெரும் கட்சிகளை எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் தொண்டர்கள் எப்போதும் தாம் சார்ந்திருக்கும் கட்சி எந்த தவறு செய்தாலும் அதற்கு தான் ஓட்டு போடுவார்கள். ஆனால் எந்தக் கட்சியையும் சாராமல் இருக்கும் பொதுமக்களே மிகுதி, அதனால்தான் ஒரு தேர்தலில் அதிக பெரும்பான்மையோடு ஜெயிக்கும் ஒரு கட்சி, அடுத்த தேர்தலில் பல இடங்களில் குறைந்த பட்ச வாக்குகள் கூட வாங்காமல் டெபாசிட் இழக்கின்றன. ஆனால் ஒரு சார்பு நிலை எடுத்து ஒரு கட்சியில் இருப்பவர்கள் எப்போதுமே தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதே இல்லை. இந்த கட்சி நமது மாநிலத்திற்கும், நாட்டிற்கும் நல்லது செய்யும் என்ற எண்ணத்தில் அந்த கட்சியில் சேர்பவர்கள் நாளடைவில் மாநில நலனையும் நாட்டு நலனையும் பெரியதாக எண்ணாமல் தான் ஆதரித்த கட்சிதான் பெரியது என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அந்த கட்சி எத்தனை பெரிய தவறு செய்தாலும் அதை எப்படியாவது முட்டுக்கொடுத்து பேச தான் நினைக்கிறார்கள். ஆம் நான் இவ்வளவு நாள் இந்த கட்சியை ஆதரித்தேன், இன்று அதன் ஆட்சி முறை சரியில்லை. ஆதனால் வெளியே வந்துவிட்டேன் என்று கூறுபவர்கள் மிகவும் குறைவு. இன்னும் சொல்லப்போனால் இந்த நாடும் இந்த நாட்டு மக்களும் குட்டிச்சுவர் ஆக போனாலும் பரவாயில்லை நான் காலம்காலமாக ஆதரித்த கட்சியை தான் என் இறுதி மூச்சு வரை ஆதரிப்பேன் என்பதை மிகப் பெருமையாக சொல்லும் பலரையும் நான் பார்த்திருக்கிறேன் இந்த மாதிரி சார்பு நிலை எடுப்பது, கருத்தே சொல்லாமல் இருப்பதை விட மோசம் அல்லவா.

அதே போல் நடு நிலைமையில் நின்று நாம் நினைப்பதை சொல்லும்போது வேறு ஒரு பிரச்னையும் உண்டு. இன்று ஒருவரை இன்னொருவர் அடிக்கிறார். அடி வாங்கியவர் சார்பாக நின்று நான் குரல் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  இன்று அடி வாங்கியவர் நாளை இன்னொருவரை போட்டு அடித்தால் நான் நாளை புதியதாக அடி வாங்குபவருக்கு பக்கமாக இருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நம்மை நோக்கி வரும் கேள்வி என்னவாக இருக்கும் என்றால், நேற்று நீ அவனுக்கு சார்பாக பேசின, இன்னைக்கு அவனை எதிர்த்து இன்னொருத்தனுக்கு சார்பாக பேசுற, நீ என்னைக்குமே ஒழுங்கா பேச மாட்டியா? என்று கேட்பார்கள் இவர்களின் புரிதல் இப்படி இருந்தால் உண்மையில் இவர்களுக்கு எதை சொல்லித்தான் புரிய வைக்க முடியும்?

ஜனநாயகத்தில் பல தரப்புகள் இருப்பது நல்லது. ஆனால் அவர்களில் ஏதேனும் ஒரு தரப்பு பெரும்பான்மை ஆகும் பட்சத்தில் அது அத்துமீறி செல்லும். ஆகவே சார்புநிலை எடுக்கும் தரப்புகள் சிறுபான்மையாக இருப்பது நல்லது. அப்போது தான் எந்த ஒரு செயலிலும் உள்ள நன்மை, தீமைகளை அவர்கள் மூலம் அறிந்துகொண்டு, பின்னர் நடுநிலைமையில் நின்று பெரும்பான்மை மக்கள் தமக்கு நலம் பயப்பதை தேர்நதெடுக்கமுடியும்.

எல்லா கொள்கைகளும் மக்களின் நலனிற்காக உருவாக்கப்பட்டது என்பது தானே நிதர்சன உண்மை.

Leave a comment