Rajinikanth J

November 16, 2020

கலையில் புதுமை

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு வீரக்கலை ஆசிரியர்.  சிலம்ப பயிற்சி பற்றியும் அதன் பாடங்கள் பற்றியும் யு டியூப் காணொளியில் பதி விடுபவர். சமீபத்தில் அவர் ஒரு புதிய சிலம்ப பாடத்தை யு டியூபில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்துவிட்டு சிலம்ப பயிற்சி செய்யும் ஒருவர் (அவர் சிலம்ப ஆசிரியரும் கூட என்று நினைக்கிறேன்) நண்பரை அலைபேசியில் அழைத்து, இந்தப் பாடம் புதியதாக இருக்கிறது, இது சிலம்பத்தில் கிடையாது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நண்பர், ஆமாம் இந்த பாடம் சிலம்பத்தில் கிடையாது, ஆனால் நான் கற்றுக்கொண்டதிலிருந்து புதியதாக ஒரு பாடத்தை உருவாக்கினேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு அலைபேசியில் பேசியவர் அப்படி எல்லாம் புதிய பாடத்தை போட நீ யார்? சிலம்பத்தை நமது முன்னோர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதே போல் தான் செய்ய வேண்டும் புதியதாக எதையும் சேர்க்க கூடாது, அப்படி சேர்ப்பது என்பது நமது மரபை மீறும் செயலாகும். ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். புதியதாக சொல்லிக்கொடுக்க நீ யார்? என்று சற்று கடுமையாகவே பேசியுள்ளார். இதை என் நண்பர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டில் அல்லது இந்திய அளவில் நிறைய பேருடைய மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஒரு கலை நமக்கு எப்படி சொல்லித்தரப்பட்டதோ அல்லது எப்படி நம்மிடம் வந்து சேர்ந்துள்ளதோ அதை அப்படியே தான் மற்றவருக்கும் நாம் சொல்லித் தரவேண்டும் அதில் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்று.

இந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி யோசிக்கும்போது சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம்.

  1. நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை மட்டும்தான் நாம் செய்ய வேண்டுமா? புதிய நுணுக்கங்களையோ அல்லது வேறு பாடங்களையோ   சேர்க்கக்கூடாதா?
  2. புதியவற்றை எதையும் சேர்க்காமல் காலம் காலமாக நமக்கு சொல்லி கொடுப்பவற்றை மட்டும் பயிற்சி செய்தால் அதனால் விளையும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
  3. புதிய பாடங்களையோ நுணுக்கங்களையோ சேர்க்கும் போது எதை எதை நாம் கருத்தில் கொள்ளலாம்.

நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை மட்டும்தான் நாம் செய்ய வேண்டுமா புதிய நுணுக்கங்களையோ அல்லது வேறு பாடங்களையோ   சேர்க்கக்கூடாதா?

நண்பர்களே, நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தில் பல நுணுக்கங்கள் இருக்கும், நன்மைகள் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதனால் தான் அந்த பாடங்கள் காலம் காலமாக பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாம் செய்யும் அத்தனை பாடங்களும் யாராவது ஒரு ஆசிரியரால் மொத்தமாக போடப்பட்டது இல்லை. ஆரம்பத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்திலிருந்து, நமக்கு வந்து சேர்ந்திருக்கும் பாடத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அப்படியேதான் செய்யப்பட்டுள்ளதா என்று நமக்கு தெரியாது. நாம் கற்றுக்கொள்ளும் பாடத்தை தான் நம் முன்னோர்கள் வழிவழியாக செய்ததாக நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படி செய்திருந்தால் இன்று சிலம்பக் கலையில் இத்தனை பிரிவுகள் வந்திருக்குமா?

எந்த கலையாக இருந்தாலும் காலம்காலமாக பல புதிய நுணுக்கங்களும், நுட்பங்களும் சேர்ந்துகொண்டு தான் இருக்கும். அப்போதுதான் அந்தக் கலை காலத்திற்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடைந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

நண்பர்களே, இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துமே கண்டுபிடிக்கப்பட்ட மூலத்திலிருந்து படிப்படியாக முன்னேறி உள்ளது. மனிதனின் ஆதி கண்டுபிடிப்பான நெருப்பு கூட, இன்று விஞ்ஞான வளர்ச்சியால் பல வாயுக்களின் உதவியுடன் குறைந்த நேரத்தில் அதிக வெப்பத்தில் எரியும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இன்று நாம் இயற்கை விவசாயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். முன் காலத்தில் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் காட்டை விட்டு வெளியே வந்து தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தது ஒரு மிகப்பெரிய அறிவியல் சிந்தனை தான். அன்று இயற்கையிலிருந்து வேட்டையாடி மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதர்களுக்கு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வது என்பது தேவையில்லாத ஒரு காரியம்தான். இவ்வளவு உணவு இயற்கையிலேயே இருக்கும்போது இதைப்போய் தேவையில்லாமல் நேர விரயம் செய்து பயிரிட்டு செயற்கையாக உற்பத்தி செய்வது இயற்கைக்கு எதிரான நியதியாக கூட சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இன்று நம் மனநிலை அப்படி அல்ல. அதுபோலத்தான் கலைகளும், இன்று நாம் பயிற்சி செய்யும் கலைகள், ஆதியில் நம் முன்னோர்களால் இதே வடிவங்களில் தான் உருவாகி இருக்குமா? என்று கேட்டால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஒரு கலை ஆரம்பத்தில் ஒரு கோட்டுச் சித்திரம் போல பல நுணுக்கங்கள் இன்றி சற்று தெளிவின்மையுடனே இருக்கும். உண்மையில் அதை கலை என்று சொல்வதைவிட ஒரு வித்தை என்றே சொல்லலாம். ஆனால் அதை பயிற்சி செய்பவர்களால் அது படிப்படியாக மெருகேற்றப்படும். தலைமுறை தலைமுறையாய் அவ்வாறு செய்யப்படும் பயிற்சியில் பல நுணுக்கங்கள் தானே கூடிவரும். நாளைடைவில் அது ஒரு சிறந்த கலையாக உருவாகி வரும். அதனால் இன்று நாம் கற்கும் எந்தக் கலையாக இருந்தாலும் அது நமக்கு முன்னர் பல தலைமுறையினரால் சிறிது சிறிதாக தரப்படுத்தப்பட்டு, மெருகேற்றப்பட்டு, செம்மை செய்யப்பட்டதுதான்.

அதுதான் முன்னரே தரப்படுத்தப்பட்டு, மெருகேற்றப்பட்டு விட்டதே, பிறகு நாம் ஏன் அதில் புதிதாக சேர்க்க வேண்டும் என்று கேட்பவர்கள் ஒரு கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளலாம்.  தரப்படுத்துவதற்கும், மெருகேற்றுவதற்கும், நேர்த்தியாக செய்வதற்கும் எல்லைகள் என ஏதாவது உண்டா என்ன? “கற்றது கையளவு” என்று சொன்னதும் நமது முன்னோர்கள் தானே.

புதியவற்றை எதையும் சேர்க்காமல் காலம் காலமாக நமக்கு சொல்லி கொடுப்பவற்றை மட்டும் பயிற்சி செய்தால் அதனால் விளையும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

புதிய பாடங்களை சேர்க்கக்கூடாது என்றால் அது தவறு என்று சொல்லுவேன். ஏனென்றால் அது கலையை அழிக்கும். வளராமல் தேங்கி நிற்கும் ஒரு கலை நாளடைவில் அழிந்தே போகும். இன்றும் தமிழ் மரபில் அப்படி அழியும் கலைகள் ஏராளமாக உள்ளன. அரசு நிறைய பணம் செலவு செய்து பல நாட்டார் கலைகளை வளர்க்க முயன்றாலும் அவை மக்களை கவர்வதில்லை. காரணம் மக்களின் மனநிலை, தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி தன்னை தகவமைத்துக் கொள்ளும் கலையே நிற்கிறது. இன்றும் சிலம்பம், குத்துவரிசை இருக்கிறது என்றால் அது தன்னை தகவமைத்துக் கொண்டு வந்ததால் மட்டுமே. புதியதாக எதையும் ஏற்காமல் புதிய நுணுக்கங்களை சேர்க்காமல் இருந்தால் நாளடைவில் அந்த கலையை நாம் அழிக்கிறோம் என்றே பொருள். ஒரு மாணவனாக ஒரு பாடத்தை முறையாக கற்றுக் கொள்வது என்பது ஒரு பயிற்சி முறைதான். ஆனால் ஒரு கலையைக் கற்றுத் தேறி ஒரு ஆசிரியராகவும் ஆனபிறகு, பல நூறு மாணவர்களுக்கு நாம் பயிற்சி கொடுக்கும் போது, நாம் சொல்லிக் கொடுக்கும் பாடத்தில் பல நுணுக்கங்கள் புதியதாக நமக்கே தோன்றி வரும், அல்லது யாருக்குமே சொல்லிக் கொடுக்காமல் நமக்கு நாமே பயிற்சி எடுத்துக் கொண்டால்கூட நாளடைவில் புதிய நுணுக்கங்கள் நமக்குத் தோன்றும். பல புதிய பயிற்சி முறைகளும் தோன்றும். இருக்கும் பாடத்திலேயே கூட பல நல்ல மாறுதல்கள் தோன்றும். அது போன்றவற்றை நாம் பாடங்களில் சேர்ப்பது நல்லது. அதே நேரத்தில் பத்து பாடம் இருக்கிறது என்றால் அந்த பத்து பாடத்திலேயே இந்த மாற்றங்களை திரும்பத் திரும்ப செய்யாமல் 11வது, 12வது பாடங்களாக கொண்டு வருவது மிகச் சிறந்தது என்றே நினைக்கிறேன். இந்த வகையில் நமது மரபு பாடங்களும் காலம் காலமாக பின்தொடர்ந்து வரும், புதியதாக சேரும் பாடங்களும் சேர்ந்து வரும். நாளடைவில் புதிய பாடங்களும் ஒரு மரபான பாடமாக அமைந்து விடும். இது ஒரு கலையின் பன்முக வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது.

புதிய பாடங்களையோ நுணுக்கங்களையோ சேர்க்கும் போது எதை எதை நாம் கருத்தில் கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைத்து தற்காப்பு கலைகளும் தன்னை பாதுகாத்து திரும்பத் தாக்கும் முறைகளைத் தான் சொல்லிக் கொடுக்கிறது, என்றாலும் ஒவ்வொரு கலைக்கும் ஒரு உடல்மொழி உண்டு. உதாரணத்திற்கு எல்லா தற்காப்புக் கலையிலும் பொதுவான ஒரு நுட்பமாக குத்து(punch) நுட்பம் இருக்கும். அந்த நுட்பத்தின் பாதைகளும் அடிக்கும் முறைகளும் ஒன்றுதான். ஆனாலும் அந்த நுட்பத்தை ஒருவர் செய்வதை வைத்து அவர் கராத்தே பயின்றவரா, குங்பூ பயின்றவரா அல்லது குத்துவரிசை பயின்றவரா என்பதை எளிதில் சொல்லிவிடலாம். அந்த வகையில், ஒவ்வொரு கலைக்கும் ஒரு இயல்பான உடல்மொழியும் அது சார்ந்த இலக்கணமும் அமைந்திருக்கும். அது முறையாக பயிற்சி செய்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாம் ஒரு நல்ல நுட்பத்தை நமது கலையில் சேர்க்கும்போது நமது கலையின் மரபும், தனித்தன்மையும் அழியாமல் அதை சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் கராத்தே கலையை 5 வருடம் பயின்று இருப்பார், பிறகு குத்துவரிசையை 2 வருடம் பயின்று இருப்பார். ஆனால் அவர் குத்து வரிசையில் ஒரு புதிய நுட்பத்தை சேர்க்கும் போது, அந்த நுட்பம் குத்து வரிசையின் நுட்பம் போல தோன்றாமல், கராத்தே நுட்பம் போலவே தோன்றும். ஏனென்றால், அவர் உடல் மொழியில் கராத்தேவின் அசைவுகள் அதிகம் கலந்திருக்கும். அதன் காரணமாக அவர் சேர்க்கும் ஒரு நுட்பம், நல்ல நுட்பமாக இருந்தாலும், அது ஒரு கராத்தே பாடம் போல தோன்றும். இந்த சிக்கலைத் தவிர்ப்பது நல்லது. நமது கலையை வளர்ப்பதற்காக தான் நாம் ஒன்றை செய்ய வேண்டுமே தவிர, அதை இன்னொரு கலையாக காட்டுவதற்காக அல்ல.

சரி அப்படி சரியான முறையில் பாடங்களை சேர்க்காமல் பலர் பல புது பாடங்களை ஒரு கலையில் சேர்க்கிறார்கள் என்றால் அதை நம்மால் தடுக்க முடியுமா? இன்று யு டியூபில் காணொளிகள் அனைவரும் பார்ப்பதற்கு கிடைப்பதால் நமக்கு இவையெல்லாம் தெரிகின்றன, இல்லையென்றால் இவையெல்லாம் தனிப்பட்ட முறையில், அந்தந்த ஊரில் சொல்லிக்கொடுக்கும்  ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு, இந்த புது பாடங்களை போடத்தான் செய்வார்கள். ஆனால் நான் அறிந்து யார் எந்த பாடங்களை எப்படி போட்டாலும், நல்ல பாடங்களே காலத்தை தாண்டி நிற்கும். பிற பாடங்கள் தானே அழிந்து போகும். யோசித்துப் பாருங்கள் எவ்வளவோ எழுத்தாளர்கள் நம் தமிழில் உண்டு ஆனால் எல்லா எழுத்தாளர்களின் எழுத்துக்களும் முன்னிறுத்தி பேசப்படுவதில்லை, நல்ல எழுத்துக்கள் மட்டுமே காலத்தை தாண்டி நிற்கும். நாம் பழைய இலக்கியத்தில் இருந்து, இன்று படிக்கும் நமது மரபான இலக்கியங்கள் எல்லாம் நல்ல படைப்புக்களே. ஆனால் இவைகள் மட்டும் தான் அந்த காலத்தில் எழுதப்பட்டதா என்றால் இல்லை. பல ஆயிரம் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் காலத்தை தாண்டி நல்ல எழுத்துக்களே நிற்கும். புதியதாக உருவாகும் போது தான், அதிலிருந்து சிறந்த பாடங்கள் மட்டும் அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும்.  நான் கற்ற என் மரபான கலையில் மட்டுமே உலகின் தலைசிறந்த பாடங்கள் உண்டு, மற்ற கலைகளில் எதுவுமே இல்லை என்று நினைப்பது, ஒரு பிற்போக்கான சிந்தனைதான். மாறாக பல கலைகளில் உள்ள பல நல்ல நுணுக்கங்களை நமது கலைக்கு ஏற்ப நமது மரபை சிதைக்காமல் சேர்ப்பதே நம் கலையை வளர்ப்பதாகும். யோசித்துப் பாருங்கள் இன்று நாம் எழுதிக் கொண்டிருக்கும் இந்த உரைநடை எழுத்து முறை கூட நம்முடைய மரபில் இல்லை. பழங்காலத்தில் பாடல்கள் வடிவிலும், செய்யுள்கள் வடிவிலும், கவிதை வடிவிலும் மட்டுமே எழுதப்பட்ட எழுத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. உரைநடை என்பது ஐரோப்பியாவில் இருந்து வந்த ஒரு புதிய முறை. ஆனால் அங்கிருந்து வந்த அந்த உரைநடையை வைத்துக்கொண்டு நாம் அவர்கள் மொழியை வளர்க்க வில்லை, நமது தாய்மொழியான தமிழை தான் வளர்க்கிறோம். இன்று நாம் சமையலில் பயன்படுத்தும் பல காய்கறிகள் மிளகாய் உட்பட, நமது மரபில் உள்ளவை அல்ல. இவையெல்லாம் வெளியில் இருந்து வந்தவையே. ஆனால் இவையெல்லாம் பயன்படுத்தி, நாம் நமது மரபார்ந்த சமையலை தான் சமைக்கிறோம். அதுபோலத்தான் தோழர்களே, பல்வேறு தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள் நமது கலையில் சேர்ந்து கொண்டே இருக்கும் வரை நமது கலை என்றுமே முன்னணியில் இருக்கும். நமது கலைகளை மேம்படுத்தி அதை உலக அளவில் கொண்டு செல்வதே நமக்கும், நமது மரபுக்கும் நாம் செய்யும் பெருமையாக இருக்க முடியும். புரூஸ் லீ தன் மரபார்ந்த கலையான குங் பு வை உலகம் அறியச் செய்தது போல். அவர் குங் பு வில் பல புதிய நுணுக்கங்களை சேர்க்கும்போது, மரபார்ந்த ஆசிரியர்கள் பலரின் எதிர்ப்பை பெற்றவர்தான். ஆனால் இன்று குங் பு என்றவுடன் நமக்கு நினைவில் வரும் முதல் பெயர் புரூஸ் லீ தான். ஒரு கலை எந்த அளவுக்கு பழைய கலை என்பது நமது மரபின் பெருமையை சொல்லும், ஆனால் அதில் சேர்க்கப்படும் புதுமைகள் தான், அதை காலத்தை தாண்டி நிற்கச் செய்யும். 

<p value="<amp-fit-text layout="fixed-height" min-font-size="6" max-font-size="72" height="80">

Leave a comment