Rajinikanth J

December 12, 2020

வெண்முரசில் வீரக்கலை – 2

நண்பர்களே,

வெல்லத் தானே வீரம் கொல்வதற்கு அல்ல என்ற பாடல்  வரிகளுக்கேற்ப ஏற்ப வீரக் கலையின் உச்சத்தில் இருக்கும் ஒருவன் கருணையுடன் இருக்க வேண்டும். அதை உணர்த்தும் வரிகள் தான் இவை.

அனைவரும் திகைத்த விழிகளுடன் பார்த்து நிற்க அக்னிவேசர் புன்னகையுடன் சொன்னார் இதையும் கற்றுக்கொள்ளுங்கள் ஷத்ரியர்களே. கணநேரத்தில் மாளவனின் கண்களை குத்தும் ஆற்றலும் அவ்வாறு செய்யலாகாது என்னும் கருணையும் இணைந்தது அந்த வித்தை. கருணையே வித்தையை முழுமைசெய்கிறது.வண்ணக்கடல் – 27

சரத்வானின் மகளாகிய  கிருபி தன் தந்தை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை தான் கவனித்து கற்றுக் கொண்டதைப் பற்றி துரோணரிடம் சொல்லும் வார்த்தைகள் இவை.

எந்தை மாணவர்களைப் பயிற்றுவிப்பதைக் கண்டிருக்கிறேன். கைக்கும் விழிக்குமான உறவைப்பற்றி அவர் சொன்னவை எனக்குப் பிடித்திருந்தன. வண்ணக்கடல் – 30

வெல்லமுடியாத வீரன் என்று ஒருவர் உண்டா? அப்படி ஒருவர் தன்னை நினைத்துக் கொள்ள முடியுமா?  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதுதானே உண்மை. அர்ஜுனன் எந்த அகந்தையும் இன்றி சொல்லும் இந்த வார்த்தைகள் அருமையானவை ஒவ்வொரு வீரனும் மனதில் கொள்ள வேண்டியவை. 

மாலினி நகைத்தபடி அதாவது நீங்கள் களமாட பிதாமகர்களும் குருநாதர்களும் மட்டுமே உள்ளனர் இல்லையா?” என்றாள். அர்ஜுனன் சிந்தனையால் சரிந்த இமைகளுடன் அவர்களைப்பற்றி நமக்குத்தெரிகிறது, அவ்வளவுதான். எனக்கு நிகரான வில்வீரர்கள் இப்போது எங்கோ இரவுபகலாக வில்பயின்றுகொண்டிருப்பார்கள். நாணொலிக்க அவர்கள் என் முன் வந்து நிற்கையில்தான் நான் அவர்களை அறியமுடியும். ஒவ்வொரு கணமும் அப்படி ஒருவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அப்படி ஒருவன் இருக்க முடியாது இளவரசேஎன்றாள் மாலினி. நிச்சயமாக இருப்பான். ஏனென்றால் வில்லை ஏந்தும்போது என்னுள் உருவாகும் ஆற்றல் என்பது என்னுடையது அல்ல. அதே ஆற்றலை காற்றிலும் வெயிலிலும் நெருப்பிலும் நீரிலும் என்னால் பார்க்கமுடிகிறது. அந்த ஆற்றல் இங்கே இயற்கையில் எல்லாம் உள்ளது. அதைத்தான் கிருபரும் சொன்னார். இதை மூலாதாரவிசை என்று சொன்னார். மனிதனின் மூலாதாரத்தில் குண்டலினி வடிவில் உள்ளது இந்த ஆற்றல். இயற்கையிலும் பாதாளத்தில் கருநாகவடிவில் உள்ளது என்று தனுர்வேதம் சொல்வதாகச் சொன்னார். அப்படியென்றால் இந்த ஆற்றல் இங்கெல்லாம் உள்ளது. எனக்குக் கிடைத்ததைப் போலவே பிறருக்கும் கிடைத்திருக்கும். வண்ணக்கடல் – 39

கர்ணன் படத்தில் ஒரு சிறந்த வசனம் ‘அறிவுடைய மனிதரும் கற்புடைய   மாந்தரும்  இந்தெந்த இனத்தில் தான் இருக்கமுடியும்  என்று கூறுவது சிரிப்பிற்கூறிய விஷயம் அல்லவா’? என்று துரியோதனின் வார்த்தைகளாக வரும். அதுபோல உலகில் கலையில் சிறந்த ஆசிரியர்கள் இந்த இனத்தில் தான் பிறக்க முடியும் அல்லது இந்த நாட்டில் தான் இருக்க முடியும் என்று சொல்ல முடியுமா?  பீமனின் சொற்களாக வெளிப்படும் இந்த அருமையான வரிகளை படித்து ரசித்தேன்.

அவரைச் சந்தித்ததும் நீ அவரது பாதங்களைப் பணிந்து வணங்கவேண்டும். உனக்கும் என்றாவது மெய்யறிதல் கிடைக்கலாம்.அர்ஜுனன் அவர் சூதர் அல்லவா?” என்றான். நீ நோயுற்றிருக்கிறாய் என்பதற்கான சான்று இந்தக் கேள்வி. உனக்கு மருத்துவன் தேவை. ஞானம் தீ போன்றது. அது பிறப்பைப் பார்ப்பதில்லை. அறிவை நமக்களிப்பவன் இறைவன். அவன் பாதங்களின் பொடிக்கு நிகரல்ல நால்வேதங்களும்.வண்ணக்கடல் – 40

வீரக்கலையில் ஒருவர் தனிப்பாட பயிற்சியின்போது தன் அசைவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அப்படி தன் அசைவுகளையும், நுட்பத்தின் நேர்த்தியையும் செம்மைப்படுத்த தான் அந்தத் தனி பாடப் பயிற்சி. அதே நேரத்தில் களத்தில் சண்டையிடும் போது எதிரில் நிற்பவர் மேல் தான் முழு கவனமும் இருக்க வேண்டும்.  கவனம் என்பது எதிரில் இருப்பவரின் அசைவுகளையும் அவர் மன ஓட்டத்தையும் கணிப்பது தானே தவிர அவரது உருவத்தையோ அல்லது பலத்தையோ  பார்த்து நாம் வெல்வோமா? என்று அஞ்சுவது அல்ல. மனதளவில் அப்படி அஞ்ச ஆரம்பித்து விட்டாலே நமக்கு தோல்வி தான். அதை சொல்லும் அஸ்வத்தாமனின் வார்த்தைகள் தான் இவை. 

இன்று இளையபாண்டவர் அக்குதிரையை எதிர்கொள்கையில் தன்னைப்பற்றி எண்ணிக்கொண்டார். ஆகவேதான் அதன் விழிகளைக் கண்டதும் அஞ்சினார். அவர் எண்ணியிருக்கவேண்டியது அக்குதிரையைப்பற்றி மட்டும்தான்என்றான் அஸ்வத்தாமன்.

ஆம், அதுவே உண்மை. பார்த்தா, வில்லெடுத்து களம்நிற்கையில் உன்னை நினைக்காதே. கலை எதுவானாலும் அது ஊழ்கமே. தன்னை இழத்தலையே நாம் ஊழ்கம் என்கிறோம்துரோணர் எழுந்து வணங்கினார் வண்ணக்கடல் – 44

விற்க்கலையைக் கற்பவருக்கு ஒரு மிகப்பெரிய திறப்பை உண்டாக்கும் கூரிய வரிகள் இவை.

பறவையை ஓர் அம்பு என்று பார்ப்பதும் அம்பை ஒரு பறவை என்று பார்ப்பதும் தனுர்வேதத்தின் கற்றல்முறையாகும். வண்ணக்கடல் – 46

திகில் படங்கள் பார்க்கும் போது  திரையில் தோன்றும் காட்சி அமைப்பைவிட பின்னணியில் கேட்கும் ஒலி தான் நம்மை மிகுந்த பயத்திற்கு உள்ளாக்கும். அதுபோல சண்டையிலும் நம் எதிரில் இருப்பவர் திடீரென்று சத்தம் கொடுத்து முன்னேறி வந்தால், எதிரில் இருப்பவர் பதறி விடுவார். தாக்க வருபவரின் வேகம் என்னவோ குறைவாக தான் இருக்கும். ஆனால் அந்த ஒலி அவர் வேகமாக வருவதை போல் ஒரு பிம்பத்தை நமக்கு ஏற்படுத்தி விடும். அதைத்தான் ஆசிரியர் ஒளியில் இருந்து நம் கற்பனையை இறக்கி வைத்து விடுங்கள் பின்னர் அந்த ஒளியை சரியாக கணிக்கலாம் என்று கூறுகிறார் இது எனக்கு ஒரு புதிய திறப்பை கொடுத்த அருமையான வரிகள்.

ஒலியை அகம் கேட்காமலாக்குவது எது? நம்முள் உறையும் வேட்டைமிருகத்துக்கு ஒலி மிகமிக இன்றியமையாதது. நாம் ஒலியைக்கேட்டே கூடுதல் அஞ்சுகிறோம். ஒலி சார்ந்தே எச்சரிக்கை கொள்கிறோம். எனவே ஒலியில் நம் கற்பனையை ஏற்றிவைத்திருக்கிறோம். அந்த எடையை ஒலியில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். கற்பனை கலவாத தூய ஒலியை நம் கணிதபுத்தி எதிர்கொள்ளட்டும். ஒலியை அறிதலென்பது வில்வேதத்தின் ஒரு கலை. அதை சப்தயோகம் என்கின்றன நூல்கள்.”  வண்ணக்கடல் – 46

சம பத நிலை பற்றியும் அதற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு பற்றியும் படிப்படியாக சொல்லப்படும் இந்த விளக்கம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

அங்குஷ்டம், குல்ஃபம், பாணி, பாதம் என நான்கும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள நிலையை சமபதம் என்கிறார்கள். சமபதத்தில் உடல் இரு எடையும் முற்றிலும் நிகராக உள்ள தராசுத்தட்டின் முள் போல நிற்கிறது. அந்நிலையில் மானுடனால் அதிகநேரம் நிற்கமுடியாதுஎன்றார் சுசரிதர். ஏன்?” என்றான் சகதேவன். ஏனென்றால் சமபதத்தில் இயல்பாக நிற்கும் உயிர்களே மண்ணில் இல்லைஎன்றார் சுசரிதர். ஏன்?” என்று சகதேவன் மீண்டும் கேட்டான். அது உடலின் இயல்பல்ல என்பதனால்தான்என்று சுசரிதர் சொன்னார். ஏன்?” என்று சகதேவன் மீண்டும் கேட்க சுசரிதர் அவ்வாறு நூலில் சொல்லப்பட்டிருக்கிறதுஎன்றார். ஏன் நூலில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது?” என்றான் சகதேவன்.

கர்ணன் புன்னகையுடன் அருகே வந்து குனிந்து ஏனென்றால் மானுடனின் அகம் பலதிசைகளிலும் பீரிட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே தராசுத்தட்டு அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு திசைவேகத்தையும் தன் சித்தத்தால் அடக்கியபடியே மானுடன் சமபதத்தில் நிற்கிறான். அவன் அகம் அவ்வாறு அகத்தை அடக்கியிருக்கையில் மட்டுமே சமபதம் நீடிக்கும். அகம் சற்றே விலகினாலும் உடல் அதைக் காட்டும்என்றான். வண்ணக்கடல் – 56

இலக்கை நேரில் பார்த்து விழ்த்தும்போது ஏற்படும் பிழையையும், நாம் அறியும் முறைகளில் ஏற்படும் பிழைகளையும் மிக அருமையாக கூறியுள்ள இந்த வரிகள் வீரக்கலை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் ஒரு மந்திரமாக கொள்ளப்பட வேண்டியவை. நான் பார்க்கும் விஷயங்களில் ஒரு புதிய திறப்பினை அளித்த மந்திர சொற்கள் என்றும் சொல்லலாம். 

கர்ணன் மேலே செல்லும் பறவைகளின் நிழல் ஓடைகளில் வரிசையாகத் தெரிந்துசெல்லும் முறையை வைத்து மூவருமே அவற்றின் பறத்தல் விரைவை கணித்தோம். ஆனால் ஐந்து ஓடைகளில் ஒன்றில் ஓடுவது கலங்கல் நீர். அது நீர்ப்படிமத்தை சற்றே வளைத்துக்காட்டும். அச்சிறு வேறுபாடு வானின் வெளியில் நெடுந்தொலைவு. அதை அவர்கள் கணிக்க மறந்துவிட்டனர்என்றான்.

துரோணர் புன்னகையுடன் ஆம், அதன்பெயரே அவதாரணப்பிழைஎன்றார். மனம் எனும் அறிதலில் இருந்து சங்கல்பம் எனும் பிழை. புத்தியில் இருந்து நிச்சயம் எனும் பிழை. அகங்காரத்தில் இருந்து அபிமானம் என்னும் பிழை. சித்தத்தில் இருந்து அவதாரணம் என்னும் பிழை. வண்ணக்கடல் – 57

வீரக்கலையில் பல உயிரினங்களின் தற்காப்பு முறைகள் மற்றும் அதன் அசைவுகளை உள்ளடக்கிய பிரிவுகள் உள்ளது போல் போரிலும் வியூகங்கள் எதிரியின் வியூகங்களுக்கு ஏற்ப அமைக்கப்படும். அதை  பீமனின் வார்த்தைகளாக வரும் வரிகள் அழகாக சித்தரிக்கின்றன.

பீமன் தொடையில் அடித்து நகைத்து “போர் இப்போதுதான் தொடங்குகிறது பார்த்தா” என்றான். “ஓசையின்றி வந்திருக்கிறான்” என்றான் தருமன். “கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின் அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்” என்றான் அர்ஜுனன். பிரயாகை – 8

தொடரும்…

1 thought on “வெண்முரசில் வீரக்கலை – 2

  1. Pingback: வெண்முரசில் போர்க்கலை | எழுத்தாளர் ஜெயமோகன்

Leave a comment