Category Archives: Martial arts

Rajinikanth J

May 15, 2022

கலையின் கடைசி நுட்பம் 

சிறு வயதில் ஆசிரியர் மாணவர் பற்றி ஏதேனும் பேச்சு வரும்போது பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன், ‘என்ன இருந்தாலும் குருவை மிஞ்ச முடியுமா.. அவரு வாத்தியாராச்சே எதாவது ஒரு வித்தையை வச்சிக்கிட்டு மிச்சத்தை தானே சொல்லிகொடுத்திருப்பாரு..’என்று. வீரக்கலை கற்க ஆரம்பித்த பிறகு, நமது மரபு கலைகள் அழிவதை பற்றி நண்பர்களுடனும், முத்த மாணவர்களுடனும் பேசும்போது , ஒவ்வொரு தலைமுறை ஆசிரியர்களும் தனக்கு தெரிந்த பாடங்களில் ஏதேனும் ஒன்றை வைத்துக்கொண்டு மீதியை தான் சொல்லிகொடுக்கிறார்கள். அதனால் ஒவ்வொரு தலை முறையிலும் ஒவ்வொரு பாடம் அழிந்து கொண்டே வந்துவிட்டது என்றும் சொல்ல கேட்டிருக்கிறேன். எதனால் இப்படி? இத்தனை வருடம் கழித்து அதை பற்றி பேசும்போது பல்வேறு எண்ணங்கள்.. இது சம்பந்தப்பட்ட கேள்விகளை இப்படி தொகுக்கலாம்.

  1. ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த பாடங்களில் ஒன்றை நிறுத்திக்கொண்டு மற்ற பாடங்களை தான் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்களா? 
  2. ஒரு ஆசிரியருக்கு தெரிந்த கடைசி பாடம் அல்லது நுட்பம் தான் கலையின் கடைசி பாடமா அல்லது நுட்பமா? 
  3. ஆசிரியர்களை மிஞ்சி மாணவர்களால் சிறப்பாக வர முடியாதா?
  4. வீர கலை பாடங்கள் என்பது நிலையானதா? 
  5. ஒரு கலையில் இது தான் கடைசி நுட்பம் என்று உள்ளதா என்ன?

ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்த பாடங்களில் ஒன்றை நிறுத்திக்கொண்டு மற்ற பாடங்களை தான் மாணவர்களுக்கு சொல்லி கொடுக்கிறார்களா?

தெரியவில்லை. அப்படியும் இருக்கலாம். என்ன காரணம்? மாணவர்கள் தன்னை மிஞ்சி சென்று விட கூடாது என்ற எண்ணமாக இருக்குமா? கலையில் ஆர்வம் உள்ள ஒரு மாணவனை ஒரு பாடத்தை சொல்லிகுடுக்காமல் நிறுத்துவதன் மூலம் அவன் கற்கும் ஆர்வத்தை நிறுத்திவிட முடியுமா என்ன? அந்த குறிப்பிட்ட பாடத்தை நிறுத்தலாம், ஆனால் அந்த பாடத்தில் சொல்லப்பட்ட நுணுக்கங்களோ அல்லது கலையின் தரிசனமோ வேறு வழிகளில் கற்க முடியாதா என்ன? ஆர்வம் உள்ள ஒரு மாணவனுக்கு தான் படிக்கும் நூல்களில் உள்ள ஒரு வரி போதாதா… ஒரு விலங்கின் அசைவு போதாதா… யாரோ பேசி கேட்கும் ஒரு வார்த்தை போதாதா..திரை படங்களில் பார்க்கும் ஒரு சண்டை அல்லது நடன காட்சி உணர்த்தி  விடாதா…

இதையெல்லாம் தாண்டிய ஒன்று உண்டு. தான் சொல்லி கொடுத்த பாடத்தை அல்லது நுட்பத்தை தான் மகிழும் வண்ணம் அல்லது வியக்கும் வண்ணம்  ஒரு மாணவர் செய்தபிறகு அதற்கு அடுத்த பாடத்தையோ அல்லது நுட்பத்தையோ ஒரு ஆசிரியரால் சொல்லி கொடுக்காமல் இருக்க முடியுமா என்ன??? உண்மையில் கலையின் மேல் ஆர்வம் உள்ள ஒருவரால் அப்படி இருக்க முடியாது. தன்னை தாண்டி ஒருவர் வந்து விடக்கூடாது என்ற ஆசையிலும்  சமூகத்தில் தன் நிலையை தக்கவைத்து கொள்வதிலும், அதிக கவனமும் ஆர்வமும் உள்ளவர்கள் அப்படி செய்யலாம். அப்படி ஒரு மனநிலையில் இருக்கும் ஒருவர் புதிதாக எதை கற்க முடியும். தனக்கு தெரிந்த ஒன்று தான் கலையின் உச்சம் என்று தன்னை சுற்றி உள்ள நான்கு பேரிடம் சொல்லிக்கொள்ளலாம். கலையின் மீது பெரிதாக ஆர்வம் இல்லாதவர்கள் அதை கேட்டு தலையாட்டி கொண்டிருக்கலாம். ஆனால் கலையும், உலகமும் அவர்களை தாண்டி சென்றுகொண்டே இருக்கும். 

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய வெண்முரசு நாவல் வரிசையில் எழுதழல் நாவலில் ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான வரிகள்.

‘நான் அவனுடைய ஆசிரியன். எந்த எதிர்பார்ப்புமின்றி வாங்கும் கலத்தின் வல்லமையை மட்டுமே நோக்கி படைக்கலக்கல்வியை அளித்தேன். திறன்கொண்ட தோளர் எவருக்கும் அதை அளிக்காமலிருந்ததும் இல்லை” என்றார் பலராமர்’ – எழுதழல் – 60.

ஒரு ஆசிரியருக்கு தெரிந்த கடைசி பாடம் அல்லது நுட்பம் தான் கலையின் கடைசி பாடமா அல்லது நுட்பமா?

நிச்சயமாக இல்லை. தனிப்பட்ட ஒருவர் அப்படி இறுமாந்து சொல்லிக்கொள்ளலாம். ஒரு கலையில் இருக்கும் எல்லா பாட முறைகளும் எனக்கு தெரியும் என்று ஒருவர் சொல்லலாம். தன் வாழ்க்கை முழுவதும் தேடி தேடி கற்கலாம். ஆனால் அந்த பாடங்களுக்குள் ஒளிந்திருக்கும் நுட்பங்கள்  உருவாக்கும்  எண்ணற்ற  சாத்தியங்களை, அதில் இருந்து தோன்றும் புதிய வகைமைகளை அறிவது கடினம்.  பெரும்பாலானவர்களுக்கு ஆரம்பத்தில் இருக்கும் கற்கும் ஆர்வம் பிறகு இருப்பதில்லை. குறிப்பாக மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்க ஆரம்பித்தவுடன் அல்லது தனக்கு ஆசிரியர் என்ற அங்கீகாரம் சமூகத்தில் கிடைத்த பிறகு பயிற்சி செய்வதையும், கற்பதையும் பெரும்பாலான ஆசிரியர்கள் செய்வதில்லை. தான் ஏற்கனவே கற்றவற்றை வைத்து சமாளிக்கிறார்கள். அப்படி இருந்தால் கலையை கற்கும் மாணவர்களுக்கு அளந்து அளந்து தான் கொடுக்கமுடியும். மாணவர்களுக்கு தெரியாத ஒன்று தனக்கு தெரியும் என்று நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்கொண்டிருக்க முடியும்.

 பெரும்பாலான மாணவர்கள் கலையின் மேல் உள்ள ஆர்வத்தில் கற்க சேர்ந்து பின்னர் கலையை விட ஆசிரியரின் மேலும், தான் கற்கும் பள்ளியின் மேலும் அதிக ஆர்வம் கொண்டு வேறெங்கும் கற்க முயலாமல் இருக்கும் இடத்திலேயே நின்று விடுவார்கள்.

ஆசிரியர்களை மிஞ்சி மாணவர்களால் சிறப்பாக வர முடியாதா?

ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்றவர்கள் எல்லாம் அப்படி தாண்டி வந்தவர்கள் தானே. அப்படி ஒருவர் சாதனையை இன்னோருவர் தாண்டி வந்தால் தானே வளர்ச்சி என்பதே நிகழமுடியும். கலையும் வளரும்.

ஒரு ஆசிரியருக்கு தன் மாணவன் தன்னை விட திறமையாக வருவதை பார்ப்பதை விட வேறு மகிழ்ச்சி உண்டா என்ன? ஒரு மாணவன் சிறப்பாக வரவேண்டும் என்பதற்கு தானே அத்தனை பயிற்சிகளும். இன்று ஒரு கைபேசியை புதிதாக கண்டுபிடிக்க முயல்பவர் இன்று இருக்கும் கைபேசியில் இருந்து மேலதிகமாக ஒன்றை செய்வாரே தவிர, கைபேசி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்ததை  விட சிறப்பாக ஒன்றை செய்ய முயலமாட்டார். அது போலத்தான் ஒரு ஆசிரியர் தான் கற்றதில் இருந்து மேலதிகமாக ஒன்றை தன் மாணவர்களுக்கு கற்பிக்க முயற்சி செய்வார். அந்த மேலதிக பயிற்சியே மாணவர்களின் அடிப்படையாக அமைந்து விடும். அந்த அடிப்படையில் இருந்து மேலெழும் மாணவர்கள் ஆசிரியரை விட திறமையாக வருவது தான் இயல்பு.

வீர கலை பாடங்கள் என்பது நிலையானதா ?

கற்கும் அடிப்படை நுட்பங்கள் நிலையானதாக இருக்கலாம். ஆனால் பாட முறைகள் ஒவ்வொரு தலைமுறைக்கும் சிறிது சிறிதாக மாற்றம் அடைந்தே வந்திருக்கும். அப்படி எல்லாம் மாறி வரவில்லை என்று யாரேனும் சொன்னால் , தவறு இல்லை. மாறவில்லை என்றே கொள்வோம். ஆனால் மாறினாலும் தவறு இல்லை என்று தான் நான் கருதுகிறேன். அடிப்படை நுட்பங்களில் கூட நாம் புதியவற்றை சேர்க்கலாம், அது நம் கலையை உலக தரத்தில் உயர்த்த உதவும். இது எல்லா கலைக்கும் பொருந்தும். எல்லா கலையிலும் மாற்றம் என்பது இன்றியமையாதது.

ஒரு கலையில் இது தான் கடைசி நுட்பம் என்று உள்ளதா என்ன?

அப்படி ஒன்று எந்த கலையிலும் இல்லை. நம்மை வெற்றி கொள்பவர் வேறு ஒருவரிடம் தோற்கும் போது கலை வேறொரு பரிமாணத்தில் உயர்ந்து வெளிப்படுகிறது. நண்பர்களே, சமமாக பயிற்சி செய்த இருவர் மோதும் போது யார் வெற்றி பெறுவார் என்று யாருக்கு தெரியும்?

தொடர் வெற்றிகள் பெற்று உச்சாணி கொம்பில் இருக்கும் ஒருவர் புதிதாக வரும் ஒருவரிடம் தோற்பது… எப்பொழுதும் நடக்கும் ஒன்று தானே. 

மனிதன் தன் அறிவினாலும், கற்பனை திறத்தாலும், உள்ளார்ந்த ஈடுபாட்டாலும், நுட்பமாக அகத்தில் உணர்ந்து அதை ஏதேனும் ஒரு வடிவத்தில் வெளிப்படுத்துவதே கலை. அப்படியான கலையின் புதிய பரிமாணம் எங்கு எப்படி யாரால் வந்தடையும் என்று எவரால் சொல்லிவிட முடியும்.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

கற்றனைத் தூறும் அறிவு.

என்பது கலைக்கும்  பொருந்தும் தானே.

Rajinikanth J

December 29, 2020

Silambam’s Specialty

Translated by Kavin Pradeepkumar

தமிழில் படிக்க இங்கே சொடுக்கவும் https://jrkanth.com/2020/08/10/312/

There are a variety of martial arts in the world, which use a stick as its primary weapon. However, the Tamil martial art “Silambam”, is one of its kind and it’s true that it has a unique technique.

When someone thinks about self-defence with a stick or self-defence in general, they will start to develop some basic moves and techniques in general.

For example, martial arts like Kuthuvarisai, Karate and Kungfu having many similarities between the punches, kicks and blocks that can be identified.

Similarly, in the martial arts where sticks are used, some similarities in the basic technique can be identified between them. These include lower attack (Vaaral), upper attack (Vettu) and punches (Kuthu).

Now, many people may ask: In what ways is Silambam unique from the other martial arts where sticks are used?

  1. The way the stick is moved or swung
  2. The uniqueness of the different footwork
  3. The different methods to skillfully maneuver the stick
  4. The various types of basic techniques
  5. The ability to express emotion, beyond the techniques
  6. The classic nature of the art itself
  • The way the stick is moved or swung:

Generally, in other martial arts, the lessons and fighting methods focus on fighting one opponent at one time. In addition, these fighting methods are shaped in a way where you move left to right or front to back to attack or defend from the enemy. However, in Silambam there are a variety of stick movements that allows the person to attack/defend opponents in all directions. For example, the basic technique “Vaaral” (வாரல்), is a lower attack where the stick moves from the bottom, towards the head. When “Vaaral” is done in different directions and variations, it is known as a “Kalaippu” (கலைப்பு).

“Kalaipu” (கலைப்பு) is a great technique that allows the fighter to break up or scare away opponents surrounding them. This type of technique is not found in many other martial arts. The “Kalaipu” technique can also be done with footwork by pivoting 360 degrees on the foot which allows the fighter to defend themselves from opponent attacking from anywhere near them, which is a specialty of Silambam. A technique like this is “Veedu Kattuthal” (வீடு கட்டுதல்).

  • The uniqueness of the different footwork

Commonly, Tamil people use words and phrases to express that they are the best when it comes to fighting or battling. One of these significant phrases are “Veedu Katti Adippen” literally meaning “Build a house and attack”. This phrase expresses a type of special footwork, which allows the fighter to maneuver in different directions, while attacking the opponent. The variations of “Veedu Kattuthal” are “2 Veedu”, “4 Veedu” and “16 Veedu”. The “Vaaral” technique that I mentioned previously is a great technique as it efficiently blocks all types of attacks thrown at the fighter from all directions (the effectiveness of “Vaaral” varies between each fighter, depending on their ability of strength and speed, which differs based on the amount of practice). This “Vaaral” technique is mostly used while doing the “Veedu Kattuthal” footwork as these two techniques complement each other very well. While the fighter moves their foot in a “X” formation (“4 Veedu”), their hands perform the “Vaaral” technique with the stick, soon they pick up speed to build a strong defense against opponents. The technique “16 Veedu” is based on “4 Veedu” except it is done in all four directions allowing the fighter to stop attacks from all directions. This technique is again unique to Silambam and can’t be found in other forms of stick fighting. Similarly, other Silambam techniques such as “Udaan”, “Kiriki” and “Thulli Varuthal” are also unique to Silambam.

  • The different methods to skillfully maneuver the stick

In other stick fighting martial arts, they are mostly taught to only move the stick from the front to the back or back to the front. However, I think only Silambam can skillfully move the stick from one direction to any other direction. Even in the globally famous martial arts from Japan and China, I haven’t seen such technique where they could move the stick from one direction to any direction in any world competitions (based on what I saw on the internet), only their stunts, such as jumping and twisting of the body in gymnastics, makes spectators jaws drop. In Silambam one of the basic training methods is to change the direction of the stick to any side at its minimum range and power. In other stick fighting martial arts, when changing directions of the stick in the middle of a fight, they are taught to slow down the motion of the stick or stop and use another technique to change directions. Therefore, Silambam is special as it doesn’t require the stick to stop or slow down and allows the fighter to skillfully change directions of the stick using the momentum of the previous technique. In other stick fighting martial arts in India such as “Kathi Samu” from Andhra pradesh or “Lathi Kela” from West Bengal, they are not as complete or perfect as Silambam. These arts don’t even at least do “4 Veedu”. They are only taught to do techniques at a maximum of 2 or 3 directions. Furthermore, in those arts, most of their techniques are done for decorative purposes (Alangara Silambam) and aren’t as effective in combat methods.

  • The various types of basic techniques

“Vaaral” and “Vettu”(lower atack and upper attack) are common throughtout most of stick based martial arts. However, “Bagul- right/left”, “Kiriki”, “Kalaippu”, “Thalai Maanam” (head/ shoulder block attack), “Thulli Varuthal” (jump), “Mel Veechu” (upper swing), “Keel Veechu”(lower swing) are basic techniques that are only found in Silambam.  “Mel Veechu” (upper swing) and “Keel Veechu”(lower swing) are like “Vaaral” and “Vettu”, except they are done without being closer to the shoulder. Particularly in the Silambam type “Naagam 16” lessons, these  two types of “Veechu” are regularly used.

  • The ability to express emotion, beyond the techniques

In most martial arts there isn’t a way to express emotions through body languauge or facial expressions. The main reason for this is because the opponent may easily understand our mood and what we might do next. This is somewhat true. However, we can easily see the confidence level of someone who has practiced effectively, through their eyes and their body language. People have said that in Ramayanam, the character “Vaali” has a blessing where he gets half the strength of his opponent when thay stand in front of him to fight. We don’t know for sure if Vaali had such a blessing, but its true that if a well-trained fighter stands in front of his opponent, the fighter’s confidence and movements will cause fear in the mind of the opponent and that fear will reduce the opponent’s skill by half. Similarly, Silambam has its own way of showing a fighter’s confidence through the “Baavala” (“பாவ்லா”) method. Two people who are about to fight, face each other while going around in a cricle and move their sticks in a way which they scare the opponent. This “Baavala” method has been practised traditonally in Silambam. Beyond this method, there are also other ways to show the fighter’s confidence and sway the opponent, for example: by tapping on any part of the body to make a noise and confuse the opponent, such as the thigh, by quickly jumping forward, by leaping forward in a technique known as “Sarukki” (“சறுக்கி”) and many more other variations.

  • The classic nature of the art itself

In most martial arts, the lessons are usually done by imagination as imaginary fight. Those that are learning the martial art, are taught how to defend from and attack opponents if they attacked from a certain direction with a certain technique, this is what most martial art lessons are based on. The teacher of that lesson will modify these different scenarios of where an opponent might attack them, to teach their students. Similarly, the lessons in Silambam are also based on imagination. Every Silambam teacher will give their students scenarios of how and where an opponent may attack, to help them practice and polish their skills. However, when modifying the intensity of the lessons, the teacher should be aware of the skill level of their student. The teacher would change the intensity of their lesson depending on whether their student is a beginner or if they are advanced. Not everyone can watch and enjoy an improved lesson that has been modified. When watching someone doing Silambam, the general public are usually amused by the speed of the stick and the sound it makes when it is swung. However, only an experienced Silambam person can see and enjoy the minute details of each move and technique. They can also differentiate between who is more focused and who can make it look as if there is an actual fight going on and they are fighting an opponent. Realizing this, makes the Silambam more interesting and enjoyable to watch. This is the reason why Silambam is being practiced in many varieties across Tamil Nadu. In Silambam, most basic techniques are very similar. However, each teacher or teachers in a district slightly modify the technique to suit their imagination, this variation creates various types of Silambam like “Kuravanji” (“குறவஞ்சி”), “Saarpatta” (“சார்பட்டா”) “Naagam 16” (“நாகம்16”), “Kathambam” (“கதம்பம்”), “Kallapathu” (“கள்ளப்பத்து”) etc. The wide variety of basic techniques and the different dimensions of the basics in Silambam and its numerous combinations are making this art as a classical one with endless creations. These are the factors that helped to keep this ancient art alive and will keep this art alive for future generations.

Rajinikanth J

December 12, 2020

வெண்முரசில் வீரக்கலை – 3

நண்பர்களே, ஆயுதங்களைக் கொண்டு பயிற்சி செய்யும் அனைவருக்கும் ஒன்று தெரிந்து இருக்கும். அந்த ஆயுதம் நம் உடம்பில் ஒரு அங்கமாக மாறாதவரை நம்மால் அதை சரிவர கையாள முடியாது என்று. எனக்கு தெரிந்த சிலம்ப ஆசிரியர் ஒருவர் என்னிடம் பேசும்போது கம்புடன் நான் பேசுவேன், அது நான் சொல்வதை கேட்கும் என்று கூறினார். வெளியிலிருந்து கேட்போருக்கு கம்புக்கு என்ன காது இருக்கிறதா? நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்டு அது செய்வதற்கு என்று சற்று நகைச்சுவையாகவே தோன்றும். ஆனால் யோசித்துப் பாருங்கள் அப்படி ஒரு வார்த்தை ஒருவர் சொல்கிறார் என்றால் அதை உணர்ந்தால் மட்டுமே முடியும் அல்லவா. அவருக்குமே தெரிந்திருக்கும் மற்றவர்கள் கேட்டால் நகைப்பார்கள் என்று, ஆனாலும் அவரை மீறி அந்த வார்த்தை வருகிறது. அது நாம் சுழற்றும் ஆயுதம் நமக்கு கை வசப்படுவதால் வரும் ஒரு தன்னம்பிக்கையான வார்த்தை அன்றி வேறென்ன. அதையே கதை ஆயுதப் போர் பற்றி துரியோதனனும் அவர் தந்தையும் பேசும் வார்த்தைகள் அற்புதமாக விளக்குகின்றன.

 “தந்தையே, எத்தனை ஆற்றலிருந்தாலும் அதை குவித்துச் செலுத்தாவிட்டால் பயனில்லை. கதாயுதத்தை சுழற்றுகையில் அடிக்குப்பின் கதையை திரும்பவும் தூக்குவதற்கே கூடுதல் தோள்விசை செலவாகிறது. மிகக்குறைந்த விசையுடன் அதைத் தூக்கமுடிந்தால் மும்மடங்கு நேரம் அதை வீசமுடியும். மும்மடங்கு விசையுடன் அடிக்கவும் முடியும்என்றான் துரியோதனன். வீசும் விசையாலேயே திரும்பவும் கதையைத் தூக்கும் கலையையே கதாயுதப்போரின் நுட்பம் என்கிறார் ஆசிரியர். அதையே கற்றுக்கொண்டிருக்கிறேன்.திருதராஷ்டிரர் நிறைவின்மையுடன் கையை அசைத்து அந்த வித்தையை ஒரு எருமையோ யானையோ புரிந்துகொள்ளுமா? புரிந்துகொள்ளாதென்றால் அது சூது. அதை வீரன் ஆடலாகாதுஎன்றார்.

தந்தையே, எருமையின் படைக்கலம் அதன் கொம்பு. ஒவ்வொரு மிருகத்திற்கும் அதன் படைக்கலம் கூடவே பிறக்கிறது. தெய்வங்கள் அதை அவற்றுக்கு கருவறையிலேயே பயிற்றுவித்து அனுப்புகின்றன. அதை அவை யுகயுகங்களாக கையாள்கின்றன. கதையை நாம் இப்போதுதான் கையில் எடுத்திருக்கிறோம். நாம் கற்பதெல்லாம் எருமை கொம்பைக் கையாள்வது போல நம் படைக்கலத்தை மிகச்சரியாக கையாள்வது எப்படி என்றுமட்டுமேஎன்றான் துரியோதனன். பிரயாகை – 41

நாம் கற்கும் கலையில் நமக்கு உள்ள எல்லைகளை அறிய உதவும் மிக அழகிய வரிகள் இவை.

பேருருக் கொண்டவனாக இருக்கிறாய். அது உன் ஆற்றல். ஆனால் எக்கலையிலும் எது ஆற்றலோ அதுவே எல்லையுமாகும். உன் பேருருவே நீ காணமுடியாதவற்றை உருவாக்கும். நீ செய்யமுடியாதவற்றை சமைக்கும். அவற்றை அறியமுடியாத ஆணவத்தையும் உனக்களிக்கும்என்றார் பலராமர். பிரயாகை – 70

எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும் நமக்கு நிகரான ஒரு வீரனை நாம் மனதளவிலும் கீழாக நினைக்காமல் அவனின் கலையையும், வீரத்தையும் மதிப்பதே நாம் கற்ற கலையின் மேன்மையை  உணர்த்தும். அதற்கு உதாரணமாக  பீமனும், அர்ஜுனனும் கர்ணனைப் பற்றி பேசும் இந்த வரிகள் நெகிழ வைப்பவை.

அர்ஜுனன் அருகே சரிந்த பீமன் மெல்லியகுரலில் பார்த்தா, இவன் வெல்வான்என்றான். அர்ஜுனன் அவன் வெல்வதே முறை மூத்தவரே. வில்லுக்குரிய தெய்வங்களின் அன்புக்குரியவன் அவன் மட்டுமேஎன்றான். பீமன் அவனிடம் அச்சமில்லை…” என்று சொல்லி தன் கைகளை மீண்டும் இறுக்கிக்கொண்டான் பிரயாகை – 85

தான் கற்கும் கலையில் தனக்கு உள்ள எல்லைகளை அறிந்த ஒருவனால் நிச்சயம் அந்த எல்லைகளை  கடக்கவும் முடியும். அதை ஒரு அறைகூவலாக எடுத்துக்கொண்டால். சரி கலையில் எல்லைகளே இல்லாமல் ஆக முடியுமா? ஏன் முடியாது  கலையில் தன்னை கரைத்தவன் பின்னர் கலையின்றி ஒன்றை காணமுடியுமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு  எல்லா ஊரும் எல்லா மக்களும் ஒன்று தானே. நகுலனின் கேள்விக்கு இளைய யாதவரின் அழகிய பதில் கீழே உள்ளது.

“ஒவ்வொருநாளும் ஓர் அறைகூவலுடன் எழுபவனே தன் கலையை கடந்துசெல்கிறான்.” அர்ஜுனன் அந்த இலக்குகளை மீசையை நீவியபடி நோக்கி நின்றான்.

நகுலன் “கலையை கடந்துசெல்வதா?” என்றான். இளைய யாதவர் திரும்பி “எந்தக்கலையும் ஒரு கருவியே. இவ்வில்லை நீங்கள் ஏந்திய தொடக்கநாட்களில் இதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டிருந்தீர்கள் அல்லவா? இன்று பயின்று பயின்று வில்லை கடந்து விட்டீர்கள். அவ்வாறே வில்வித்தையையும் கடக்க முடியும்” என்றார். நகுலன் “எப்படி?”என்றபடி அவர் அருகே வந்தான்.

திரும்பிப்பாராமலேயே இளைய யாதவர் தன் படையாழியை ஏவ அது சென்று ஏழு இலக்குகளையும் சீவிவிட்டு திரும்பி வந்தது. அர்ஜுனன் அதை ஓரக்கண்ணால் நோக்கிவிட்டு பார்வையை திருப்பிக்கொண்டான். “இளைய யாதவரே, இலக்குகளும் அவ்வாறு இல்லாமலாகுமா?” என்றான் நகுலன். “கலையின் மறுஎல்லை என்பது அதுதான்” என்றார் இளைய யாதவர். பன்னிரு படைக்களம் – 24

கலையில்  மன ஒருமை பற்றியும், அதை கலை செம்மைப் படுத்துவது பற்றியும் அர்ஜுனன் கூறும்  அற்புத வரிகள் இவை.

“படைக்கலங்கள் அனைத்தும் கூரியவை. கூர்மை என்பது ஒருமுனை நோக்கி ஒடுங்குதல்” என்றான் அர்ஜுனன். “விழிகளும் கைகளும் சித்தமும் ஒற்றைப்புள்ளியென்றாவது இது.”

“புறப்பொருள் என்பது உள்ளமே” என்றான் அர்ஜுனன். “புறப்பொருளில் நாம் ஆற்றும் எதுவும் உள்ளத்தில் நிகழ்வதே. மரத்தை செதுக்குபவன் உள்ளத்தை செதுக்குகிறான். பாறையை சீரமைப்பவன் உள்ளத்தையே சீரமைக்கிறான். படைக்கலத்தை பயில்பவன் உள்ளத்தையே பயில்கிறான். படைக்கலம் கைப்படுகையில் உள்ளமும் வெல்லப்படுவதை அவன் காண்பான்.” கிராதம் – 74

கலையில் கரை கண்ட ஒருவன், பலரால் வித்தகன் எனப் போற்றப்பட்ட ஒருவன், பல நூறு வெற்றிகளை கண்ட ஒருவன் திடீரென்று காட்டில் தான் சந்தித்த ஒரு காட்டாளனிடம் தோற்றுவிட்டால் அவன் மனநிலை எப்படி இருக்கும். நண்பர்களே, கீழ் உள்ள  வரிகள் அந்த  காட்டாளனின் மனைவி காளி தோல்வி பற்றியும், அவன் மேலும் அறிந்து கொள்வது பற்றியும் கூறியிருப்பார்.  இந்த வரிகள் இடம்பெற்றிருக்கும் கிராதம் 79 ஆவது அத்தியாயம் முழுக்கவே ரசித்து படிக்கக்கூடிய ஒரு அத்தியாயம்தான். முழு அத்தியாயத்தையும் கொடுக்க முடியாததால் தோல்வியை ஒரு மனிதன் எடுத்துக் கொள்ள வேண்டிய மனநிலை பற்றிய இந்த  அருமையான வரிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனன் அவள் முகத்தை நோக்கியபடி உளமழிந்து நின்றான். அவள் விழிகள் முலையூட்டும் அன்னைவிழியென கனிந்திருந்தன. சின்னஞ்சிறு குமிழுதடுகளில் எப்போதுமென ஒரு புன்னகை இருந்தது. அவிழ்ந்த நீள்குழலை அள்ளிச் சுழற்றிமுடிந்தபடி அவள் திரும்பியபோது அவன் அறியாமல் அவர்களை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்தான். அவள் திரும்பி “என்ன?” என்றாள். அவன் நெஞ்சு கலுழ விம்மி அழுதபடி “இனி நான் வாழ விரும்பவில்லை, அன்னையே” என்றான். அவள் அவனை நோக்கி புருவம் சுளித்து “ஏன்?” என்றாள். “நான் தோற்றுவிட்டேன்… தோல்விக்குப் பின் வாழ்வது என்னால் இயலாது” என்றபோது அவன் விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து நெஞ்சில் சொட்டியது. உதடுகளை இறுக்கி அவன் தலைகுனிந்தான்.

அறிவிலியே என புன்னகையிலேயே செல்லமாக அழைத்து “தோற்றாய் என்றால் நீ அறியாத ஒன்றை சந்தித்திருக்கிறாய் என்றல்லவா பொருள்?  அதைக் கற்கும் ஒரு வாய்ப்பு உனக்கு அமைந்திருக்கிறது என்றுதானே கொள்ளவேண்டும் நன்மாணவன்?” என்றாள். அவன் உள்ளம் சொடுக்க, விழிதூக்கி அவளை நோக்கினான்.  உதடுகள் சொல்லில்லாமல் அசைந்தன. இனிய மென்குரலில் “நீ கற்றிராததை இவரிடமிருந்து கற்றுக்கொள். கற்பிக்கும் இவர் உன் ஆசிரியர். ஆசிரியனிடம் தோற்பதில் இழிவென ஏதுமில்லை. ஆசிரியன் முன்பு முற்றிலும் தோற்காதவன் எதையும் கற்கத்தொடங்குவதில்லை” என்றாள். கிராதம் – 79

பயிற்சி களத்தில் தனி பயிற்சி செய்யும்போது ஏற்படும் மன ஒருங்கிணைவை உணர்ந்தது உண்டு. லிவிங் வித் மைக்கேல் ஜாக்சன் டான்ஸ் என்ற பேட்டியில், பேட்டியாளர் மைக்கேல் ஜாக்சனை பார்த்து ஒரு கேள்வி கேட்டிருப்பார். நடனமாடும் போது நீங்கள் என்ன நினைத்துக்கொண்டு   ஆடுவீர்கள்  என்று?அதற்கு மைக்கேல், என்ன நினைப்பது? எதையாவது நினைத்துக் கொண்டு ஆடினால்  அது தான் நீங்கள் செய்யும் மிகப்பெரிய தவறு. ஆடும்போது மனம் முழுக்க ஆட்டத்தின் தான் இருக்கிறது வேறு எதுவும் இல்லை என்று கூறியிருப்பார். நீர்க்கோலம் நூலில் 27 வது அத்தியாயத்தில் உள்ள கீழ்வரும் வரிகளைப் படித்தபோது  மேலே கூறிய மைக்கேல் ஜாக்சனின் பேட்டி என்னை அறியாமல் நினைவுக்கு வந்தது. கீழ் உள்ள வரிகள் நடன கலை பற்றியது என்றாலும் எல்லா கலையும் அடிப்படையில் ஒன்று தானே. தன் அசைவில் உளம் குவிக்க முடியாதவன் சண்டை கலையில் பிறர் அசைவை எப்படி கண்டுபிடித்து தடுக்க முடியும். 

நடனக்கலை என்பது நம் தன்னிலையை இங்கிருந்து விலக்கி பிறவெனச் சூழ்ந்துள்ளவையாக முற்றிலும் ஆக்கிக்கொள்ளுதலே. மேடையில் ஆடுவதல்ல அது. நடனத்தின் முழுமையென்பது தானன்றி எவருமே இல்லாத இடத்தில் ஆட்டன் அடையும் நிறைவு மட்டுமே.” நீர்க்கோலம் 27

வகுப்பில் ஆசிரியர் அனைவருக்கும் ஒரே மாதிரிதான் பயிற்சி அளிக்கிறார். ஆனால் சில மாணவர்கள் உடனே கற்றுக் கொள்கிறார்கள். சில மாணவர்கள் சற்று காலம் தாழ்த்தி கற்றுக்கொள்கிறார்கள். அதேபோல் ஒரு வகுப்பில் அனைவருமே முதலில் வருவதில்லை அதை விளக்கும் கீழுள்ள வரிகள் மிக முக்கியமானவை.

எந்த ஆசிரியர் அளிப்பதையும் மாணவர்கள் அவ்வண்ணமே பெற்றுக்கொள்வதில்லை. ஆசிரியர் விதைகளை அளிக்க முடியும், முளைப்பது அவரவர் ஈரம் – நீர்க்கோலம் – 28

ஒரு நல்ல ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்கும் அருமையான வரிகள்.

நான் அவனுடைய ஆசிரியன். எந்த எதிர்பார்ப்புமின்றி வாங்கும் கலத்தின் வல்லமையை மட்டுமே நோக்கி படைக்கலக்கல்வியை அளித்தேன். திறன்கொண்ட தோளர் எவருக்கும் அதை அளிக்காமலிருந்ததும் இல்லை” என்றார் பலராமர் – எழுதழல் – 60

ஆம் ஒரு ஆசிரியர் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் இல்லையா. தன்னிடம் கற்கும் மாணவன் ஏழையா, பணக்காரனா, சொந்தமா என்ற எந்த பாகுபாடும் கிடையாது அவனின் திறமைக்கு ஏற்ப அடுத்தடுத்து கொடுத்துக் கொண்டிருப்பது தான் ஒரு ஆசிரியரின் மிகச்சிறந்த பண்பு.

என் முதன்மை ஆசிரியர் வீரக் கலைஞர் மனோகரன் அவர்கள் ஒரு கதை சொல்லுவார், ஐந்து வீரக்கலை ஆசிரியர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் முதலில் என் சண்டை முறை இப்போது மாறிவிட்டது , எதிரி அடித்தால் முதல் அடியை தடுத்தவுடன் ஒரு அடியில் அவனை வீழ்த்திவிடுவேன். சண்டை இரு வினாடிகளில் முடிந்துவிடும் என்று கூறுவார் . இதை கேட்ட அடுத்த ஆசிரியர் இரண்டு வினாடி எதற்கு தேவை , நான் தடையும் அடியும் ஒரே கணத்தில் செய்து விடுவேன், தடுப்பதையும் அடிப்பதையும் தனித்தனியே செய்வது நேர விரையும் என்று கூறுவார்  , மூன்றாவது ஆசிரியர்  சற்று யோசித்து விட்டு எதிரியின் அடியை எதற்கு நமது சக்தியை விரையம் செய்து தடுக்கவேண்டும் . எதிரியின் அடியில் இருந்து விலகி அடிப்பேன் என்று கூற நான்காவது ஆசிரியர் வியப்புடன் சண்டை என்று வந்த பிறகு எதிரி அடிக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். அவன் நம்மை அடிக்க அசையும் கணத்திலேயே நான் அடித்து விடுவேன் என்று கூறுவார். ஐந்தாவது ஆசிரியர் அமைதியாக இருக்க, அனைவரும் அவரை நோக்க அவர் சிரிப்புடன் என் எதிரில் இருப்பவர் என்னை தாக்க மனதில் முடிவு செய்து விட்டாலே நான் அவரை தாக்கி விடுவேன் என்று கூறுவார். நூல்பதினேழு – இமைக்கணம் – 12   அத்தியாயத்தை படித்த போது மீண்டும் அதை நினைத்து கொண்டேன் . புற பயிற்சி என்பது ஒரு ஆரம்ப நிலை என்று. 

சீன மொழி திரைப்படங்களில் மட்டுமே நான்  வளையும் வாட்களை  வைத்து சண்டையிடும் சண்டைக்காட்சிகளை பார்த்துள்ளேன். அதன் அடிப்படை ஆரம்பத்தில் எனக்கு புரியவில்லை. பின்னர் சற்று பயிற்சி கூடிய பிறகு புரிய ஆரம்பித்தது. ஆனால் அதை இரண்டு வரிகளில் ஆசிரியர்  விளக்கி  இருப்பது உண்மையிலேயே எனக்கு மிகப் பெரிய வியப்பை அளித்தது. நான் அவருக்கு கடிதம் எழுதி இதையெல்லாம் எங்கே படிக்கிறீர்கள் அந்தப் புத்தகத்தை எனக்கு பரிந்துரைக்க முடியுமா என்று கேட்கும் அளவிற்கு அதிசயித்து விட்டேன்.

அதற்கு அவர் இவ்வாறு பதில் அனுப்பி இருந்தார். “நான் வெண்முரசிலுள்ள போர்க்கலைச் செய்திகளை மூன்று இடங்களில் இருந்து எடுத்தேன். ஒன்று, இளமையில் ஒரு போர்க்கலைப் பயிற்சி எனக்கு இருந்தது. அது எங்களூர் வழக்கம். ஆனால் நான் தெரிந்துகொண்டதே மிகுதி, பயின்றது மிகக்குறைவு. கேரள களரி கலை சார்ந்த செய்திகளை களரி நூல்களிலிருந்தும் ஆசிரியர்களில் இருந்தும் பயின்றேன். களரி சார்ந்த ஒரு சினிமாவுக்கு எழுதவும் வாய்ப்பு கிடைத்தது. கன்னடப்படம்- தேஹி

மகாபாரதத்திலேயே உள்ள சஸ்த்ர- நிசஸ்த்ர வித்யைகள், [படைக்கலக்கலை, படைக்கலமில்லாப் போர்க்கலை] தனுர்சாஸ்திரம் [விற்கலை] ஆகியவை பற்றிய செய்திகளையும் எடுத்துக்கொண்டேன்” என்று. அவரின் எழுத்துல உழைப்பு வியக்க வைத்தது.

எடையைவிட கூர்மை மேல். கூர்மையைவிட விசை மேல். விசையைவிட கோணம் மேலானது. கோணத்தை விட தருணம் முதன்மையானது. செந்நாவேங்கை 21

கார்கடல்-15 -“மிகச் சரியாக படைநூல்கள் கூறும்படி அமைக்கப்பட்டுள்ளன இச்சூழ்கைகள். ஆனால் நூல்களில் இல்லாத ஒன்று எப்போதும் படைகளில் நிகழும். அதுவே போரை வடிவமைக்கும்” என்று கர்ணன் சொன்னான்

வியுகமாக இருந்தாலும் அல்லது எந்த சண்டை நுட்பமாக இருந்தாலும் ஏட்டில் படித்து புரிந்து கொள்வதற்கும் நடைமுறை சாத்தியங்களுக்கும் உள்ள வேறுபாடு தேர்ந்த வீரர்களால் மட்டுமே அறியமுடியும். வீரக்கலை புதிதாக கற்பவர்கள் சில நுட்பங்களை அறியும்போது அது தான் உச்சம் என்று நினைப்பார்கள். ஆனால் அதை உடைக்கும் இன்னொரு நுட்பம் தெரியவரும் போது, யாராலும் தப்பமுடியாத நுட்பத்தை சொல்லி தரும்படி கேட்பார்கள். அப்படி ஒரு நுட்பம் கிடையாது. மாட்டி கொள்வதும் தப்பிச்செல்வதும் எதிரில் நிற்பவரின் திறமையை பொருத்து தான் உள்ளது என்று கூறினால் ஏற்க மறுப்பார்கள். மந்திரம் போல ஒரு நுட்பம் தன்னை எந்த நிலையிலும் காக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அப்படி ஒரு மந்திரம் உண்மையிலேயே இருக்க முடியுமா என்ன?  புரூஸ் லீயின் ஒரு புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உண்டு “நான் ஆயிரம் விதமான உதைகளை ஒவ்வொரு முறை பயிற்சி செய்தவனை பார்த்து பயப்படுவது இல்லை. ஆனால் ஒரே ஒரு உதையை  ஆயிரம் முறை பயிற்சி செய்தவனை பார்த்து பயப்படுகிறேன்”. 

முற்றும்.

Rajinikanth J

December 12, 2020

வெண்முரசில் வீரக்கலை – 2

நண்பர்களே,

வெல்லத் தானே வீரம் கொல்வதற்கு அல்ல என்ற பாடல்  வரிகளுக்கேற்ப ஏற்ப வீரக் கலையின் உச்சத்தில் இருக்கும் ஒருவன் கருணையுடன் இருக்க வேண்டும். அதை உணர்த்தும் வரிகள் தான் இவை.

அனைவரும் திகைத்த விழிகளுடன் பார்த்து நிற்க அக்னிவேசர் புன்னகையுடன் சொன்னார் இதையும் கற்றுக்கொள்ளுங்கள் ஷத்ரியர்களே. கணநேரத்தில் மாளவனின் கண்களை குத்தும் ஆற்றலும் அவ்வாறு செய்யலாகாது என்னும் கருணையும் இணைந்தது அந்த வித்தை. கருணையே வித்தையை முழுமைசெய்கிறது.வண்ணக்கடல் – 27

சரத்வானின் மகளாகிய  கிருபி தன் தந்தை மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்த பயிற்சிகளை தான் கவனித்து கற்றுக் கொண்டதைப் பற்றி துரோணரிடம் சொல்லும் வார்த்தைகள் இவை.

எந்தை மாணவர்களைப் பயிற்றுவிப்பதைக் கண்டிருக்கிறேன். கைக்கும் விழிக்குமான உறவைப்பற்றி அவர் சொன்னவை எனக்குப் பிடித்திருந்தன. வண்ணக்கடல் – 30

வெல்லமுடியாத வீரன் என்று ஒருவர் உண்டா? அப்படி ஒருவர் தன்னை நினைத்துக் கொள்ள முடியுமா?  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதுதானே உண்மை. அர்ஜுனன் எந்த அகந்தையும் இன்றி சொல்லும் இந்த வார்த்தைகள் அருமையானவை ஒவ்வொரு வீரனும் மனதில் கொள்ள வேண்டியவை. 

மாலினி நகைத்தபடி அதாவது நீங்கள் களமாட பிதாமகர்களும் குருநாதர்களும் மட்டுமே உள்ளனர் இல்லையா?” என்றாள். அர்ஜுனன் சிந்தனையால் சரிந்த இமைகளுடன் அவர்களைப்பற்றி நமக்குத்தெரிகிறது, அவ்வளவுதான். எனக்கு நிகரான வில்வீரர்கள் இப்போது எங்கோ இரவுபகலாக வில்பயின்றுகொண்டிருப்பார்கள். நாணொலிக்க அவர்கள் என் முன் வந்து நிற்கையில்தான் நான் அவர்களை அறியமுடியும். ஒவ்வொரு கணமும் அப்படி ஒருவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

அப்படி ஒருவன் இருக்க முடியாது இளவரசேஎன்றாள் மாலினி. நிச்சயமாக இருப்பான். ஏனென்றால் வில்லை ஏந்தும்போது என்னுள் உருவாகும் ஆற்றல் என்பது என்னுடையது அல்ல. அதே ஆற்றலை காற்றிலும் வெயிலிலும் நெருப்பிலும் நீரிலும் என்னால் பார்க்கமுடிகிறது. அந்த ஆற்றல் இங்கே இயற்கையில் எல்லாம் உள்ளது. அதைத்தான் கிருபரும் சொன்னார். இதை மூலாதாரவிசை என்று சொன்னார். மனிதனின் மூலாதாரத்தில் குண்டலினி வடிவில் உள்ளது இந்த ஆற்றல். இயற்கையிலும் பாதாளத்தில் கருநாகவடிவில் உள்ளது என்று தனுர்வேதம் சொல்வதாகச் சொன்னார். அப்படியென்றால் இந்த ஆற்றல் இங்கெல்லாம் உள்ளது. எனக்குக் கிடைத்ததைப் போலவே பிறருக்கும் கிடைத்திருக்கும். வண்ணக்கடல் – 39

கர்ணன் படத்தில் ஒரு சிறந்த வசனம் ‘அறிவுடைய மனிதரும் கற்புடைய   மாந்தரும்  இந்தெந்த இனத்தில் தான் இருக்கமுடியும்  என்று கூறுவது சிரிப்பிற்கூறிய விஷயம் அல்லவா’? என்று துரியோதனின் வார்த்தைகளாக வரும். அதுபோல உலகில் கலையில் சிறந்த ஆசிரியர்கள் இந்த இனத்தில் தான் பிறக்க முடியும் அல்லது இந்த நாட்டில் தான் இருக்க முடியும் என்று சொல்ல முடியுமா?  பீமனின் சொற்களாக வெளிப்படும் இந்த அருமையான வரிகளை படித்து ரசித்தேன்.

அவரைச் சந்தித்ததும் நீ அவரது பாதங்களைப் பணிந்து வணங்கவேண்டும். உனக்கும் என்றாவது மெய்யறிதல் கிடைக்கலாம்.அர்ஜுனன் அவர் சூதர் அல்லவா?” என்றான். நீ நோயுற்றிருக்கிறாய் என்பதற்கான சான்று இந்தக் கேள்வி. உனக்கு மருத்துவன் தேவை. ஞானம் தீ போன்றது. அது பிறப்பைப் பார்ப்பதில்லை. அறிவை நமக்களிப்பவன் இறைவன். அவன் பாதங்களின் பொடிக்கு நிகரல்ல நால்வேதங்களும்.வண்ணக்கடல் – 40

வீரக்கலையில் ஒருவர் தனிப்பாட பயிற்சியின்போது தன் அசைவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். அப்படி தன் அசைவுகளையும், நுட்பத்தின் நேர்த்தியையும் செம்மைப்படுத்த தான் அந்தத் தனி பாடப் பயிற்சி. அதே நேரத்தில் களத்தில் சண்டையிடும் போது எதிரில் நிற்பவர் மேல் தான் முழு கவனமும் இருக்க வேண்டும்.  கவனம் என்பது எதிரில் இருப்பவரின் அசைவுகளையும் அவர் மன ஓட்டத்தையும் கணிப்பது தானே தவிர அவரது உருவத்தையோ அல்லது பலத்தையோ  பார்த்து நாம் வெல்வோமா? என்று அஞ்சுவது அல்ல. மனதளவில் அப்படி அஞ்ச ஆரம்பித்து விட்டாலே நமக்கு தோல்வி தான். அதை சொல்லும் அஸ்வத்தாமனின் வார்த்தைகள் தான் இவை. 

இன்று இளையபாண்டவர் அக்குதிரையை எதிர்கொள்கையில் தன்னைப்பற்றி எண்ணிக்கொண்டார். ஆகவேதான் அதன் விழிகளைக் கண்டதும் அஞ்சினார். அவர் எண்ணியிருக்கவேண்டியது அக்குதிரையைப்பற்றி மட்டும்தான்என்றான் அஸ்வத்தாமன்.

ஆம், அதுவே உண்மை. பார்த்தா, வில்லெடுத்து களம்நிற்கையில் உன்னை நினைக்காதே. கலை எதுவானாலும் அது ஊழ்கமே. தன்னை இழத்தலையே நாம் ஊழ்கம் என்கிறோம்துரோணர் எழுந்து வணங்கினார் வண்ணக்கடல் – 44

விற்க்கலையைக் கற்பவருக்கு ஒரு மிகப்பெரிய திறப்பை உண்டாக்கும் கூரிய வரிகள் இவை.

பறவையை ஓர் அம்பு என்று பார்ப்பதும் அம்பை ஒரு பறவை என்று பார்ப்பதும் தனுர்வேதத்தின் கற்றல்முறையாகும். வண்ணக்கடல் – 46

திகில் படங்கள் பார்க்கும் போது  திரையில் தோன்றும் காட்சி அமைப்பைவிட பின்னணியில் கேட்கும் ஒலி தான் நம்மை மிகுந்த பயத்திற்கு உள்ளாக்கும். அதுபோல சண்டையிலும் நம் எதிரில் இருப்பவர் திடீரென்று சத்தம் கொடுத்து முன்னேறி வந்தால், எதிரில் இருப்பவர் பதறி விடுவார். தாக்க வருபவரின் வேகம் என்னவோ குறைவாக தான் இருக்கும். ஆனால் அந்த ஒலி அவர் வேகமாக வருவதை போல் ஒரு பிம்பத்தை நமக்கு ஏற்படுத்தி விடும். அதைத்தான் ஆசிரியர் ஒளியில் இருந்து நம் கற்பனையை இறக்கி வைத்து விடுங்கள் பின்னர் அந்த ஒளியை சரியாக கணிக்கலாம் என்று கூறுகிறார் இது எனக்கு ஒரு புதிய திறப்பை கொடுத்த அருமையான வரிகள்.

ஒலியை அகம் கேட்காமலாக்குவது எது? நம்முள் உறையும் வேட்டைமிருகத்துக்கு ஒலி மிகமிக இன்றியமையாதது. நாம் ஒலியைக்கேட்டே கூடுதல் அஞ்சுகிறோம். ஒலி சார்ந்தே எச்சரிக்கை கொள்கிறோம். எனவே ஒலியில் நம் கற்பனையை ஏற்றிவைத்திருக்கிறோம். அந்த எடையை ஒலியில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். கற்பனை கலவாத தூய ஒலியை நம் கணிதபுத்தி எதிர்கொள்ளட்டும். ஒலியை அறிதலென்பது வில்வேதத்தின் ஒரு கலை. அதை சப்தயோகம் என்கின்றன நூல்கள்.”  வண்ணக்கடல் – 46

சம பத நிலை பற்றியும் அதற்கும் மனதிற்கும் உள்ள தொடர்பு பற்றியும் படிப்படியாக சொல்லப்படும் இந்த விளக்கம் என்னை மிகவும் சிந்திக்க வைத்தது.

அங்குஷ்டம், குல்ஃபம், பாணி, பாதம் என நான்கும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ள நிலையை சமபதம் என்கிறார்கள். சமபதத்தில் உடல் இரு எடையும் முற்றிலும் நிகராக உள்ள தராசுத்தட்டின் முள் போல நிற்கிறது. அந்நிலையில் மானுடனால் அதிகநேரம் நிற்கமுடியாதுஎன்றார் சுசரிதர். ஏன்?” என்றான் சகதேவன். ஏனென்றால் சமபதத்தில் இயல்பாக நிற்கும் உயிர்களே மண்ணில் இல்லைஎன்றார் சுசரிதர். ஏன்?” என்று சகதேவன் மீண்டும் கேட்டான். அது உடலின் இயல்பல்ல என்பதனால்தான்என்று சுசரிதர் சொன்னார். ஏன்?” என்று சகதேவன் மீண்டும் கேட்க சுசரிதர் அவ்வாறு நூலில் சொல்லப்பட்டிருக்கிறதுஎன்றார். ஏன் நூலில் அவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது?” என்றான் சகதேவன்.

கர்ணன் புன்னகையுடன் அருகே வந்து குனிந்து ஏனென்றால் மானுடனின் அகம் பலதிசைகளிலும் பீரிட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே தராசுத்தட்டு அலைபாய்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு திசைவேகத்தையும் தன் சித்தத்தால் அடக்கியபடியே மானுடன் சமபதத்தில் நிற்கிறான். அவன் அகம் அவ்வாறு அகத்தை அடக்கியிருக்கையில் மட்டுமே சமபதம் நீடிக்கும். அகம் சற்றே விலகினாலும் உடல் அதைக் காட்டும்என்றான். வண்ணக்கடல் – 56

இலக்கை நேரில் பார்த்து விழ்த்தும்போது ஏற்படும் பிழையையும், நாம் அறியும் முறைகளில் ஏற்படும் பிழைகளையும் மிக அருமையாக கூறியுள்ள இந்த வரிகள் வீரக்கலை மட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரின் வாழ்விலும் ஒரு மந்திரமாக கொள்ளப்பட வேண்டியவை. நான் பார்க்கும் விஷயங்களில் ஒரு புதிய திறப்பினை அளித்த மந்திர சொற்கள் என்றும் சொல்லலாம். 

கர்ணன் மேலே செல்லும் பறவைகளின் நிழல் ஓடைகளில் வரிசையாகத் தெரிந்துசெல்லும் முறையை வைத்து மூவருமே அவற்றின் பறத்தல் விரைவை கணித்தோம். ஆனால் ஐந்து ஓடைகளில் ஒன்றில் ஓடுவது கலங்கல் நீர். அது நீர்ப்படிமத்தை சற்றே வளைத்துக்காட்டும். அச்சிறு வேறுபாடு வானின் வெளியில் நெடுந்தொலைவு. அதை அவர்கள் கணிக்க மறந்துவிட்டனர்என்றான்.

துரோணர் புன்னகையுடன் ஆம், அதன்பெயரே அவதாரணப்பிழைஎன்றார். மனம் எனும் அறிதலில் இருந்து சங்கல்பம் எனும் பிழை. புத்தியில் இருந்து நிச்சயம் எனும் பிழை. அகங்காரத்தில் இருந்து அபிமானம் என்னும் பிழை. சித்தத்தில் இருந்து அவதாரணம் என்னும் பிழை. வண்ணக்கடல் – 57

வீரக்கலையில் பல உயிரினங்களின் தற்காப்பு முறைகள் மற்றும் அதன் அசைவுகளை உள்ளடக்கிய பிரிவுகள் உள்ளது போல் போரிலும் வியூகங்கள் எதிரியின் வியூகங்களுக்கு ஏற்ப அமைக்கப்படும். அதை  பீமனின் வார்த்தைகளாக வரும் வரிகள் அழகாக சித்தரிக்கின்றன.

பீமன் தொடையில் அடித்து நகைத்து “போர் இப்போதுதான் தொடங்குகிறது பார்த்தா” என்றான். “ஓசையின்றி வந்திருக்கிறான்” என்றான் தருமன். “கழுகு ஓசையிடாது. வியூகத்தில் அந்த உயிரினத்தின் அமைப்பு மட்டும் அல்ல இயல்பும் கருத்தில்கொள்ளப்படும்” என்றான் அர்ஜுனன். பிரயாகை – 8

தொடரும்…

Rajinikanth J

December 11, 2020

வெண்முரசில் வீரக்கலை – 1

வணக்கம் நண்பர்களே, 2014 ஜனவரி முதல் 2020 ஜூலை வரை வெண்முரசு என்ற  ஒரு மிகப் பெரிய நாவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் எழுதியுள்ளார். இது மகாபாரதத்தின் மறுஆக்கம் ஆகும். இந்த பதிவு நாவலில் நான் படித்து ரசித்த அல்லது என் மனதில் வார்த்தைகள் அற்று இருந்த வீரக் கலையின் பல விஷயங்களுக்கு முறையான வார்த்தைகள் அளித்த கருத்துக்களை பற்றியது. ஒரு வீரக்கலை ஆசிரியனாக என் மனதில் உள்ளதை நான் மாணவருக்கு கடத்தும் போது அதை பல்வேறு வார்த்தைகளில், மொழி சார்ந்து ஆங்கிலத்தின் உதவியுடன் விளக்க வேண்டியிருக்கும். ஆனால் தூய தமிழ் நடையில் எழுதப்பட்ட இந்த நாவலை படிக்கும் போது நம் மனதில் வீரக்கலை சார்ந்து அல்லது அது சார்ந்த நுணுக்கங்கள் பற்றி ஒரு பக்க அளவுக்கு பேச வேண்டியதை ஆசிரியர் பல இடங்களில் இரண்டு அல்லது மூன்று வரிகளில் சாதாரணமாக எழுதியிருப்பார். அது போன்ற வரிகளை படித்தவுடன் எனக்கு அதை தாண்டி செல்ல மனம் வராது. மீண்டும் மீண்டும் அந்த வரிகளைப் படித்துக் கொண்டிருப்பேன். அப்படிப் படித்து நான் தெரிந்துகொண்ட மற்றும் ரசித்த பல வரிகளை தான் இந்த கட்டுரையில் எடுத்துக் காட்டி இருக்கிறேன். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்களும் 26 தனி நூல்களாக வெளிவந்துள்ள இந்த மிகப்பெரிய நாவலில் உள்ள வீரக்கலை சார்ந்த அனைத்து விஷயங்களையும் என்னால் சொல்ல முடியுமா என்று கேட்டால் நிச்சயமாக முடியாது. அதிலும் குறிப்பாக பதினெட்டாவது நூலான செந்நா வேங்கையில் குருச்சேத்திரப் போரின் முதல் நாளும், அடுத்து வந்த மூன்று நூல்களான திசை தேர் வெள்ளம், கார்கடல் மற்றும்  இருட்கனி ஆகியவற்றில் குருச்சேத்திரப் போரின் மீதி நாட்களும் வந்துள்ளன. சண்டைக்காட்சிகளை எல்லாம் எழுதாமல் இதில் வீரக்கலை சார்ந்த அடிப்படை நுணுக்கங்கள் பற்றிய வரிகளையும், கற்கும் மனநிலைகள், கற்றுக்கொடுக்கும் மனநிலைகள், சண்டையின் போதான மனநிலைகள், கலையின் உச்சம் மற்றும் பிரபஞ்ச தன்மை போன்றவற்றை மட்டும்  கொடுக்க முயன்றுள்ளேன்.

வீரக் கலையின் உச்சத்தில் உள்ள ஒருவர் போர் செய்யும் போது தங்கள் எதிரிகளை மட்டுமல்ல அங்கு உள்ள சூழ்நிலைகளையும் நன்கு கவனிப்பார் என்பதை உணர்த்தும் வரிகள் இவை.

பீஷ்மரின் வில்வித்தை ஒரு நடனம் போலிருந்தது. அவர் குறிபார்க்கவில்லை, கைகள் குறிகளை அறிந்திருந்தன. அவர் உடல் அம்புகளை அறிந்திருந்தது. அவரது கண்கள் அப்பகுதியின் புழுதியையும் அறிந்திருந்தன. முதற்கனல் – 12

தான் கற்ற கலையின் மேல் நம்பிக்கை உள்ள ஒருவர் தன்னிடம் தனக்கு நிகராக தன்னைவிட இளையவர் வந்து மோதும்போது அதனால் தனக்கு ஏற்படும் காயத்தை கண்டு சினம் கொள்வாரா? அல்லது ஆணவத்தால்  சீண்டப் படுவாரா? இரண்டும் இல்லை நண்பர்களே அந்த கலைஞனை பாராட்டவே செய்வார் கீழ்வரும் வரிகள் அதைத்தான் சொல்கின்றன.

சால்வனுடைய அம்பு ஒன்று பீஷ்மரின் ரதத்தின் கொடிமரத்தை உடைத்தது. அவரது கூந்தலை வெட்டிச்சென்றது அர்த்தசந்திர அம்பு ஒன்று. பீஷ்மர் முகம் மலர்ந்து உரத்த குரலில் சால்வனே, உன் வீரத்தை நிறுவிவிட்டாய்இதோ மூன்றுநாழிகையாக நீ என்னுடன் போரிட்டிருக்கிறாய். உனக்கு வெற்றியும் புகழும் நீண்ட ஆயுளும் அமையட்டும். உன் குடிகள் நலம்வாழட்டும்என வாழ்த்தினார். முதற்கனல் – 12

வாள் வீச்சின் முறைமைகளை மிக அற்புதமாக எடுத்து சொல்லப்பட்டிருக்கும் அருமையான வரிகள் இது.

ஆம் அது முறைதான்என்றார் பீஷ்மர். வாளில்லாதவனை மன்னனாகிய நீ கொல்லக்கூடாது…” கையில் அந்த வாளை எடுத்துக்கொண்டு, “முன்னால் வாஐந்துவிரல்களாலும் வாளைப்பிடிக்காதே, வெட்டின் விசை உன் தோளில்தான் சேரும். நான்கு விரல்கள் வாளைப்பிடிக்கையில் சுண்டு விரல் விலகி நின்றிருக்கவேண்டும். மணிக்கட்டுக்குமேல் வாளின் விசை செல்லக்கூடாதுஎன்றார். இருகால்களையும் சேர்த்து நிற்காதே. இடக்காலை சற்று முன்னால் வைத்து இடுப்பைத்தாழ்த்தி நில்வாள் உன்னை முன்னகரச்செய்யட்டும்.முதற்கனல் – 18

தனிப்பட்ட வீரம் என்பது வேறு ஒரு படையை வழி நடத்துவது என்பது வேறு, அதுபோலத்தான் சிறந்த விளையாட்டு வீரனாக இருப்பது என்பது வேறு ஒரு சிறந்த அணி தலைவனாக இருப்பது என்பது வேறு. இரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது போல் இருந்தாலும் இரண்டும் வெவ்வேறு பண்புகளாகும். அதை கீழ் வரும் வரிகள் உணர்த்துகின்றன.

இளவரசே, வீரம் வேறு  படைநடத்தல் வேறுஎன்றார் தளகர்த்தரான பிரசேனர். உங்களைத் தொடர்ந்துவரும் ஆயிரக்கணக்கான வீரர்களிடம் நீங்கள் நினைப்பதை சொல்வதற்கான பயிற்சியை நீங்கள் இன்னும் அடையவில்லை. அதுவே தளபதிக்கான கல்வி.முதற்கனல் – 39

மனத்தையும் உடலையும்  தன் வசப்படுத்தாமல் எந்த கலையையும் கற்க முடியாது. குறிப்பாக வீரக் கலையில் கோபம் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு முக்கிய குணமாகும்.  உதாரணமாக எதிரில்  நிற்பவரிடம் ஒரு அடி வாங்கி விட்டாலே வலியினாலோ அல்லது ஆணவத்தினாலோ நம்மை அறியாமலேயே கோபம் தலைக்கு ஏறும். அதை  நம் மனதில் வளரவிட்டால் பின்னர் எதிராளியின் எந்த அசைவும் நமக்கு புரியாது, நம் கோபம் மட்டுமே நம் மனதை ஆக்கிரமித்திருக்கும். அதை வென்று எதிராளியின் அசைவுகளை அறிய  தொடங்குவதே  வீரக்கலையில் இருக்கும் முக்கியமான பயிற்சி.  அக்னிவேசர் தன் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் போது வரும் முக்கியமான வரிகள் தான் இவை.

சினமின்றிப் போர்புரிய மனிதர்களால் இயலாது. சினமே போருக்கு பெரும் தடையும் ஆகும். இந்த முரண்பாட்டை வெல்வதற்காகவே எந்தப் போர்க்கலையும் உருவாக்கப்பட்டுள்ளதுஎன்றார் அக்னிவேசர். முதற்கனல் – 43

சினத்தை வெல்லவே அனைத்துப்போர்க்கலைகளும் கற்றுக்கொடுக்கின்றன. சினம் என்பது அகத்தின் கொந்தளிப்பு. அகத்தின் கண்முன் தோற்றமே புறம். ஆகவே புறத்தை வெல்லுதல் அகத்தை வெல்லுதலேயாகும். புறத்தை வெல்ல புறத்தில் உள்ள ஏதேனும் ஒன்றைப் பற்றுக. அதில் புறவுலகம் அனைத்தையும் கொண்டுவந்து ஏற்றுக. கைக்குச் சிக்கும் ஒன்றில் அனைத்தையும் காண்பவன் மெல்ல அதுவே உலகமென்றாகிறான். அது அவன் கையில் நிற்கையில் மொத்தப்பருப்பிரபஞ்சமும் அவன் கையில் நிற்கிறது. அது வில்லாகலாம் வாளாகலாம். உளியாகலாம் முரசுக்கோலாகலாம்…” முதற்கனல் – 43

சினம் நம்மை திசைதிருப்பும் என்பது உண்மைதான். ஆனால் வெறிகொண்ட சினம் என்ன செய்யும்? வெறும் அகந்தையினால் வரும் சினம் நம்மை செயலிழக்கச் செய்யும். ஆனால் சுற்றமும், நண்பரும், குடும்பத்தாரும் நம் கண் முன்னே கொல்லப்படும்போது நமக்கு வரும் சினம் வெறியாக மாறி நம் பலத்தை இன்னும் பத்து மடங்காக மாற்றும் என்பதும் உண்மைதானே. அதைத்தான் இங்கு துருபதனின் வடிவில் அர்ஜுனன் காண்பது.

கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவே துருபதன் நின்றான். இறுதிக்கணத்தில் துருபதனில் கூடிய வெறி அர்ஜுனனை வியப்படையச்செய்தது. வில்வித்தையில் முழுமையான அகஅமைதியே அம்புகளை குறிதவறாமல் ஆக்குமென அவன் கற்றிருந்தான். ஆனால் உச்சகட்ட வெறியும் அதையே நிகழ்த்துமென அப்போது கண்டான். அப்போது துருபதனின் அகமும் ஆழத்தில் அசைவற்ற நிலைகொண்டிருந்ததா என எண்ணிக்கொண்டான். பிரயாகை – 9

கலையை கற்பது பற்றி ஒரு கதை சொல்லப்படுவதுண்டு. ஒரு மாணவன் ஆசிரியரிடம் சென்று தான் கலையைக் கற்க விரும்புவதாகவும் எவ்வளவு சீக்கிரம்  தன்னால் கலையை கற்றுக்கொள்ள முடியும் என்று கேட்பார். அதற்கு ஆசிரியர் ஒரு 10 வருடங்கள் ஆகும்  என்று பதில் கூறுவார். அதற்கு மாணவர் ஆசிரியரே, நான் காலை மாலை இருவேளையும் வந்து கற்றுக்கொள்கிறேன் அப்போது எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க அதற்கு ஆசிரியர் அப்படி என்றால் 15 வருடத்தில் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுவார். மாணவர் சற்று  அயர்ந்து விட்டு நான் உங்களோடு இருக்கிறேன் எப்போதும் பயிற்சியை செய்து கொண்டிருக்கிறேன் அப்போது எவ்வளவு நாள் ஆகும் என்று கேட்க அதற்கு ஆசிரியர் ஒரு 20 வருடத்தில் கற்றுக்கொள்ளலாம் என்று சொல்லுவார்.  அதற்கு மாணவர் சரி நான் வந்து கற்றுக் கொள்கிறேன், எப்போது நான் கற்றுக் கொண்டு விட்டேன் என்று சொல்கிறீர்களோ அப்போது நான் மீண்டு செல்கிறேன் என்று சொல்லுவார். உடனே ஆசிரியர் சிரித்து உனக்கு இருக்கும் அவசரத்தை  பார்த்தால் கலையின் மேல் இருக்கும் பற்றை விட நான் இந்த  கலையை முழுவதுமாக  கற்று கொண்டு விட்டேன் என்று வெளியில் சென்று பெருமை பேசும் அவசரம்தான் அதிகம் உள்ளது போல் தெரிகிறது. நான் முதலில் சொன்ன பத்து வருடத்திற்கு குறைவாக கூட உன்னால் கற்றுக் கொள்ள முடியும். ஆனால்  அதை என்னால் இப்போது சொல்ல முடியாது. உன் வெளிப்புற உடற்பயிற்சி மட்டுமல்ல உன் மனப் பயிற்சியும் சேர்ந்தால்தான் கலை உனக்கு  கனியும் என்று கூறுவார். அதுபோல அக்னிவேசர் துரோணருக்கு சொல்லும் மூன்று மனநிலைகள் தான் கலையின் ஞானம் கணிவதற்கான வழிகள்.

அக்னிவேசர் சொன்னார் துரோணா, வித்தையின் பொருட்டு மட்டுமான வித்தையே ஞானமாகக் கனியும். ஞானத்தை வெல்வதற்கான ஆசையே கூட வித்தைக்கு தடையே. வித்தையின் இன்பம், அதன் முழுமைக்கான தேடல், வித்தையாக நாமே ஆவதன் எளிமை மூன்றுமே வித்தையை முழுமையாக்கும் மூன்று மனநிலைகள். வேறெதுவும் கற்பவனின் அகத்தில் இருக்கக் கூடாது.துரோணர் வணங்கினார். நீ வெல்ல வேண்டிய எதிரி அதுவே. அதற்கென்றே வில்லை ஆள்வாயாக!முதற்கனல்’ – 43

போருக்கு தேவையான மன ஒருமையையும் எடைமிக்க ஆயுதங்களைக் கொண்டு அதிக நேரம் சண்டை செய்யும் முறைகளையும் விளக்கும் அற்புதமான வரிகள் இவை.

அவன் கண்கள் என் கண்களை மட்டுமே பார்த்தன. ஒருகணமாவது என் கதையை அல்லது தோள்களை அவன் பார்க்கிறானா என்று நான் கவனித்தேன். மிருகங்கள் மட்டுமே போரில் அவ்வளவு முழுமையான கவனம் கொண்ட கண்களுடன் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

ஆனால் முதல் அடியை அவன் தடுத்தபோதே தெரிந்துவிட்டது அவனை என்னால் எளிதில் வெல்லமுடியாதென்று. வழக்கமாக கதைவீரர்கள் செய்வது போல அவன் என் அடியை கீழிருந்து தடுத்து அதன் விசையை தன் கதையிலோ தோளிலோ ஏற்றுக்கொள்ளவில்லை. கதையின் குமிழுக்கு மிகக்கீழே என் கைப்பிடிக்கு அருகில் அவன் கதையின் குமிழ் என்னை தடுத்தது. ஹம்ஸமர்த்த முறைப்படி அன்னங்கள் கழுத்தை பின்னிக்கொள்வதுபோல எங்கள் கதைகள் இணைந்தன. அவன் மெல்ல அவ்விசையை திசைமாற்றி என்னை தடுமாறச்செய்தான்.

இளைஞனே, உன்னைப்பார்த்தால் கதை உன் ஆயுதமல்ல என்று தெரிகிறது. சுழலும் கதையின் ஆற்றல் உச்சகட்டமாக வெளிப்படும் இடமும் உண்டு. மிகக்குறைவாக வெளிப்படும் இடமும் உண்டு என்பதைத் தெரிந்துகொள். அவன் கதை என் வீச்சை எப்போதும் மிகக்குறைந்த விசைகொண்ட முனையில்தான் சந்தித்தது. ஒவ்வொருமுறையும் அவன் கதை என் கதையை திசைமாற்ற மட்டுமே செய்தது. அதற்கு என் விசையையே அது பயன்படுத்தியது. எங்கள் போரை வலிமைக்கும் திறமைக்குமான மோதல் என்று சொல்லலாம். முதற்கனல் – 46

புத்திமான் பலவான் ஆவான் என்று ஒரு பழமொழி உண்டு. அது போல எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் நல்ல அறிவு இல்லையென்றால் அவன் வெல்வது கடினம். பலாஹாஸ்வர் முனிவரின் வார்த்தையாக வரும் இந்த வரிகள் முக்கியமானவை

பலாஹாஸ்வர்.  ”முட்டாள். இவன் தோற்பான் என நான் முன்னரே அறிவேன். உடல் அறிவின் ஆயுதம் மட்டுமே.விதுரன் மிகமெல்ல அதை அவர் இந்தப்போர் வழியாகவே அறியமுடியும் முனிவரேஎன்றான். உன் திட்டமா இது?” என்றார் பலாஹாஸ்வர். மழைப்பாடல் – 6

போரின் போது தேவைப்படும்  மன ஒருமையையும்,  போரில் ஏறி அடிப்பது போல் இறங்கி தடுப்பது முக்கியம். இரண்டும் சேர்ந்தது தான் சண்டை என்று கிருபர் துச்சாதனன் மற்றும் பீமனுக்கும் விளக்கும் மிகச்சிறந்த வரிகள் இவை.

எப்போது உன் அகம் முழுமையாக அசைவற்று நீ போர்செய்கிறாயோ அன்றே உன் கரம் முழுவல்லமையைப் பெறும்என்றார் கிருபர். துச்சாதனன் வணங்கினான்.

பீமா, உன் உள்ளம் அலையற்றிருக்கிறது. போரின் இன்பத்தை அறிந்து மகிழ்வுறுகிறது. ஆனால் உனக்கு பின்வாங்கத்தெரியவில்லை. பின்வாங்கக் கற்றுக்கொள்ளாதவன் முழுவெற்றியை அடையமுடியாது. முன்கால் வைக்கும் அதே முழுமையுடன் பின்கால் வைக்க நீ கற்றாகவேண்டும்என்றார் கிருபர். பீமன் புன்னகையுடன் தலைதாழ்த்தினான். வண்ணக்கடல் – 13

தொடரும்…

Rajinikanth J

November 16, 2020

கலையில் புதுமை

சமீபத்தில் நண்பர் ஒருவருடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு வீரக்கலை ஆசிரியர்.  சிலம்ப பயிற்சி பற்றியும் அதன் பாடங்கள் பற்றியும் யு டியூப் காணொளியில் பதி விடுபவர். சமீபத்தில் அவர் ஒரு புதிய சிலம்ப பாடத்தை யு டியூபில் பதிவிட்டிருந்தார். அதை பார்த்துவிட்டு சிலம்ப பயிற்சி செய்யும் ஒருவர் (அவர் சிலம்ப ஆசிரியரும் கூட என்று நினைக்கிறேன்) நண்பரை அலைபேசியில் அழைத்து, இந்தப் பாடம் புதியதாக இருக்கிறது, இது சிலம்பத்தில் கிடையாது என்று சொல்லியிருக்கிறார். அதற்கு நண்பர், ஆமாம் இந்த பாடம் சிலம்பத்தில் கிடையாது, ஆனால் நான் கற்றுக்கொண்டதிலிருந்து புதியதாக ஒரு பாடத்தை உருவாக்கினேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு அலைபேசியில் பேசியவர் அப்படி எல்லாம் புதிய பாடத்தை போட நீ யார்? சிலம்பத்தை நமது முன்னோர்கள் என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதே போல் தான் செய்ய வேண்டும் புதியதாக எதையும் சேர்க்க கூடாது, அப்படி சேர்ப்பது என்பது நமது மரபை மீறும் செயலாகும். ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். புதியதாக சொல்லிக்கொடுக்க நீ யார்? என்று சற்று கடுமையாகவே பேசியுள்ளார். இதை என் நண்பர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டில் அல்லது இந்திய அளவில் நிறைய பேருடைய மனநிலை இதுவாகத்தான் இருக்கிறது என்று கூட சொல்லலாம். ஒரு கலை நமக்கு எப்படி சொல்லித்தரப்பட்டதோ அல்லது எப்படி நம்மிடம் வந்து சேர்ந்துள்ளதோ அதை அப்படியே தான் மற்றவருக்கும் நாம் சொல்லித் தரவேண்டும் அதில் கூட்டவோ குறைக்கவோ கூடாது என்று.

இந்த பிரச்சனைகளை முன்னிறுத்தி யோசிக்கும்போது சில கேள்விகளை நமக்கு நாமே கேட்டுக் கொள்ளலாம்.

  1. நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை மட்டும்தான் நாம் செய்ய வேண்டுமா? புதிய நுணுக்கங்களையோ அல்லது வேறு பாடங்களையோ   சேர்க்கக்கூடாதா?
  2. புதியவற்றை எதையும் சேர்க்காமல் காலம் காலமாக நமக்கு சொல்லி கொடுப்பவற்றை மட்டும் பயிற்சி செய்தால் அதனால் விளையும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?
  3. புதிய பாடங்களையோ நுணுக்கங்களையோ சேர்க்கும் போது எதை எதை நாம் கருத்தில் கொள்ளலாம்.

நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை மட்டும்தான் நாம் செய்ய வேண்டுமா புதிய நுணுக்கங்களையோ அல்லது வேறு பாடங்களையோ   சேர்க்கக்கூடாதா?

நண்பர்களே, நமக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தில் பல நுணுக்கங்கள் இருக்கும், நன்மைகள் இருக்கும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. அதனால் தான் அந்த பாடங்கள் காலம் காலமாக பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நாம் செய்யும் அத்தனை பாடங்களும் யாராவது ஒரு ஆசிரியரால் மொத்தமாக போடப்பட்டது இல்லை. ஆரம்பத்தில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்திலிருந்து, நமக்கு வந்து சேர்ந்திருக்கும் பாடத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அப்படியேதான் செய்யப்பட்டுள்ளதா என்று நமக்கு தெரியாது. நாம் கற்றுக்கொள்ளும் பாடத்தை தான் நம் முன்னோர்கள் வழிவழியாக செய்ததாக நாம் நினைத்துக் கொள்கிறோம். அப்படி செய்திருந்தால் இன்று சிலம்பக் கலையில் இத்தனை பிரிவுகள் வந்திருக்குமா?

எந்த கலையாக இருந்தாலும் காலம்காலமாக பல புதிய நுணுக்கங்களும், நுட்பங்களும் சேர்ந்துகொண்டு தான் இருக்கும். அப்போதுதான் அந்தக் கலை காலத்திற்கு ஏற்ப பரிணாம மாற்றம் அடைந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.

நண்பர்களே, இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்து இன்று வரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துமே கண்டுபிடிக்கப்பட்ட மூலத்திலிருந்து படிப்படியாக முன்னேறி உள்ளது. மனிதனின் ஆதி கண்டுபிடிப்பான நெருப்பு கூட, இன்று விஞ்ஞான வளர்ச்சியால் பல வாயுக்களின் உதவியுடன் குறைந்த நேரத்தில் அதிக வெப்பத்தில் எரியும் அளவுக்கு முன்னேறியுள்ளது. இன்று நாம் இயற்கை விவசாயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். முன் காலத்தில் காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த மனிதன் காட்டை விட்டு வெளியே வந்து தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தது ஒரு மிகப்பெரிய அறிவியல் சிந்தனை தான். அன்று இயற்கையிலிருந்து வேட்டையாடி மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதர்களுக்கு நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்வது என்பது தேவையில்லாத ஒரு காரியம்தான். இவ்வளவு உணவு இயற்கையிலேயே இருக்கும்போது இதைப்போய் தேவையில்லாமல் நேர விரயம் செய்து பயிரிட்டு செயற்கையாக உற்பத்தி செய்வது இயற்கைக்கு எதிரான நியதியாக கூட சொல்லப்பட்டிருக்கும். ஆனால் இன்று நம் மனநிலை அப்படி அல்ல. அதுபோலத்தான் கலைகளும், இன்று நாம் பயிற்சி செய்யும் கலைகள், ஆதியில் நம் முன்னோர்களால் இதே வடிவங்களில் தான் உருவாகி இருக்குமா? என்று கேட்டால் அதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஒரு கலை ஆரம்பத்தில் ஒரு கோட்டுச் சித்திரம் போல பல நுணுக்கங்கள் இன்றி சற்று தெளிவின்மையுடனே இருக்கும். உண்மையில் அதை கலை என்று சொல்வதைவிட ஒரு வித்தை என்றே சொல்லலாம். ஆனால் அதை பயிற்சி செய்பவர்களால் அது படிப்படியாக மெருகேற்றப்படும். தலைமுறை தலைமுறையாய் அவ்வாறு செய்யப்படும் பயிற்சியில் பல நுணுக்கங்கள் தானே கூடிவரும். நாளைடைவில் அது ஒரு சிறந்த கலையாக உருவாகி வரும். அதனால் இன்று நாம் கற்கும் எந்தக் கலையாக இருந்தாலும் அது நமக்கு முன்னர் பல தலைமுறையினரால் சிறிது சிறிதாக தரப்படுத்தப்பட்டு, மெருகேற்றப்பட்டு, செம்மை செய்யப்பட்டதுதான்.

அதுதான் முன்னரே தரப்படுத்தப்பட்டு, மெருகேற்றப்பட்டு விட்டதே, பிறகு நாம் ஏன் அதில் புதிதாக சேர்க்க வேண்டும் என்று கேட்பவர்கள் ஒரு கேள்வியைத் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளலாம்.  தரப்படுத்துவதற்கும், மெருகேற்றுவதற்கும், நேர்த்தியாக செய்வதற்கும் எல்லைகள் என ஏதாவது உண்டா என்ன? “கற்றது கையளவு” என்று சொன்னதும் நமது முன்னோர்கள் தானே.

புதியவற்றை எதையும் சேர்க்காமல் காலம் காலமாக நமக்கு சொல்லி கொடுப்பவற்றை மட்டும் பயிற்சி செய்தால் அதனால் விளையும் நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

புதிய பாடங்களை சேர்க்கக்கூடாது என்றால் அது தவறு என்று சொல்லுவேன். ஏனென்றால் அது கலையை அழிக்கும். வளராமல் தேங்கி நிற்கும் ஒரு கலை நாளடைவில் அழிந்தே போகும். இன்றும் தமிழ் மரபில் அப்படி அழியும் கலைகள் ஏராளமாக உள்ளன. அரசு நிறைய பணம் செலவு செய்து பல நாட்டார் கலைகளை வளர்க்க முயன்றாலும் அவை மக்களை கவர்வதில்லை. காரணம் மக்களின் மனநிலை, தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே இருக்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி தன்னை தகவமைத்துக் கொள்ளும் கலையே நிற்கிறது. இன்றும் சிலம்பம், குத்துவரிசை இருக்கிறது என்றால் அது தன்னை தகவமைத்துக் கொண்டு வந்ததால் மட்டுமே. புதியதாக எதையும் ஏற்காமல் புதிய நுணுக்கங்களை சேர்க்காமல் இருந்தால் நாளடைவில் அந்த கலையை நாம் அழிக்கிறோம் என்றே பொருள். ஒரு மாணவனாக ஒரு பாடத்தை முறையாக கற்றுக் கொள்வது என்பது ஒரு பயிற்சி முறைதான். ஆனால் ஒரு கலையைக் கற்றுத் தேறி ஒரு ஆசிரியராகவும் ஆனபிறகு, பல நூறு மாணவர்களுக்கு நாம் பயிற்சி கொடுக்கும் போது, நாம் சொல்லிக் கொடுக்கும் பாடத்தில் பல நுணுக்கங்கள் புதியதாக நமக்கே தோன்றி வரும், அல்லது யாருக்குமே சொல்லிக் கொடுக்காமல் நமக்கு நாமே பயிற்சி எடுத்துக் கொண்டால்கூட நாளடைவில் புதிய நுணுக்கங்கள் நமக்குத் தோன்றும். பல புதிய பயிற்சி முறைகளும் தோன்றும். இருக்கும் பாடத்திலேயே கூட பல நல்ல மாறுதல்கள் தோன்றும். அது போன்றவற்றை நாம் பாடங்களில் சேர்ப்பது நல்லது. அதே நேரத்தில் பத்து பாடம் இருக்கிறது என்றால் அந்த பத்து பாடத்திலேயே இந்த மாற்றங்களை திரும்பத் திரும்ப செய்யாமல் 11வது, 12வது பாடங்களாக கொண்டு வருவது மிகச் சிறந்தது என்றே நினைக்கிறேன். இந்த வகையில் நமது மரபு பாடங்களும் காலம் காலமாக பின்தொடர்ந்து வரும், புதியதாக சேரும் பாடங்களும் சேர்ந்து வரும். நாளடைவில் புதிய பாடங்களும் ஒரு மரபான பாடமாக அமைந்து விடும். இது ஒரு கலையின் பன்முக வளர்ச்சிக்கு மிக இன்றியமையாதது.

புதிய பாடங்களையோ நுணுக்கங்களையோ சேர்க்கும் போது எதை எதை நாம் கருத்தில் கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைத்து தற்காப்பு கலைகளும் தன்னை பாதுகாத்து திரும்பத் தாக்கும் முறைகளைத் தான் சொல்லிக் கொடுக்கிறது, என்றாலும் ஒவ்வொரு கலைக்கும் ஒரு உடல்மொழி உண்டு. உதாரணத்திற்கு எல்லா தற்காப்புக் கலையிலும் பொதுவான ஒரு நுட்பமாக குத்து(punch) நுட்பம் இருக்கும். அந்த நுட்பத்தின் பாதைகளும் அடிக்கும் முறைகளும் ஒன்றுதான். ஆனாலும் அந்த நுட்பத்தை ஒருவர் செய்வதை வைத்து அவர் கராத்தே பயின்றவரா, குங்பூ பயின்றவரா அல்லது குத்துவரிசை பயின்றவரா என்பதை எளிதில் சொல்லிவிடலாம். அந்த வகையில், ஒவ்வொரு கலைக்கும் ஒரு இயல்பான உடல்மொழியும் அது சார்ந்த இலக்கணமும் அமைந்திருக்கும். அது முறையாக பயிற்சி செய்த அனைவருக்கும் தெரிந்திருக்கும். நாம் ஒரு நல்ல நுட்பத்தை நமது கலையில் சேர்க்கும்போது நமது கலையின் மரபும், தனித்தன்மையும் அழியாமல் அதை சேர்க்க வேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் கராத்தே கலையை 5 வருடம் பயின்று இருப்பார், பிறகு குத்துவரிசையை 2 வருடம் பயின்று இருப்பார். ஆனால் அவர் குத்து வரிசையில் ஒரு புதிய நுட்பத்தை சேர்க்கும் போது, அந்த நுட்பம் குத்து வரிசையின் நுட்பம் போல தோன்றாமல், கராத்தே நுட்பம் போலவே தோன்றும். ஏனென்றால், அவர் உடல் மொழியில் கராத்தேவின் அசைவுகள் அதிகம் கலந்திருக்கும். அதன் காரணமாக அவர் சேர்க்கும் ஒரு நுட்பம், நல்ல நுட்பமாக இருந்தாலும், அது ஒரு கராத்தே பாடம் போல தோன்றும். இந்த சிக்கலைத் தவிர்ப்பது நல்லது. நமது கலையை வளர்ப்பதற்காக தான் நாம் ஒன்றை செய்ய வேண்டுமே தவிர, அதை இன்னொரு கலையாக காட்டுவதற்காக அல்ல.

சரி அப்படி சரியான முறையில் பாடங்களை சேர்க்காமல் பலர் பல புது பாடங்களை ஒரு கலையில் சேர்க்கிறார்கள் என்றால் அதை நம்மால் தடுக்க முடியுமா? இன்று யு டியூபில் காணொளிகள் அனைவரும் பார்ப்பதற்கு கிடைப்பதால் நமக்கு இவையெல்லாம் தெரிகின்றன, இல்லையென்றால் இவையெல்லாம் தனிப்பட்ட முறையில், அந்தந்த ஊரில் சொல்லிக்கொடுக்கும்  ஆசிரியர்கள் தமது மாணவர்களுக்கு, இந்த புது பாடங்களை போடத்தான் செய்வார்கள். ஆனால் நான் அறிந்து யார் எந்த பாடங்களை எப்படி போட்டாலும், நல்ல பாடங்களே காலத்தை தாண்டி நிற்கும். பிற பாடங்கள் தானே அழிந்து போகும். யோசித்துப் பாருங்கள் எவ்வளவோ எழுத்தாளர்கள் நம் தமிழில் உண்டு ஆனால் எல்லா எழுத்தாளர்களின் எழுத்துக்களும் முன்னிறுத்தி பேசப்படுவதில்லை, நல்ல எழுத்துக்கள் மட்டுமே காலத்தை தாண்டி நிற்கும். நாம் பழைய இலக்கியத்தில் இருந்து, இன்று படிக்கும் நமது மரபான இலக்கியங்கள் எல்லாம் நல்ல படைப்புக்களே. ஆனால் இவைகள் மட்டும் தான் அந்த காலத்தில் எழுதப்பட்டதா என்றால் இல்லை. பல ஆயிரம் எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும். ஆனால் காலத்தை தாண்டி நல்ல எழுத்துக்களே நிற்கும். புதியதாக உருவாகும் போது தான், அதிலிருந்து சிறந்த பாடங்கள் மட்டும் அடுத்த தலைமுறைக்கு சென்று சேரும்.  நான் கற்ற என் மரபான கலையில் மட்டுமே உலகின் தலைசிறந்த பாடங்கள் உண்டு, மற்ற கலைகளில் எதுவுமே இல்லை என்று நினைப்பது, ஒரு பிற்போக்கான சிந்தனைதான். மாறாக பல கலைகளில் உள்ள பல நல்ல நுணுக்கங்களை நமது கலைக்கு ஏற்ப நமது மரபை சிதைக்காமல் சேர்ப்பதே நம் கலையை வளர்ப்பதாகும். யோசித்துப் பாருங்கள் இன்று நாம் எழுதிக் கொண்டிருக்கும் இந்த உரைநடை எழுத்து முறை கூட நம்முடைய மரபில் இல்லை. பழங்காலத்தில் பாடல்கள் வடிவிலும், செய்யுள்கள் வடிவிலும், கவிதை வடிவிலும் மட்டுமே எழுதப்பட்ட எழுத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. உரைநடை என்பது ஐரோப்பியாவில் இருந்து வந்த ஒரு புதிய முறை. ஆனால் அங்கிருந்து வந்த அந்த உரைநடையை வைத்துக்கொண்டு நாம் அவர்கள் மொழியை வளர்க்க வில்லை, நமது தாய்மொழியான தமிழை தான் வளர்க்கிறோம். இன்று நாம் சமையலில் பயன்படுத்தும் பல காய்கறிகள் மிளகாய் உட்பட, நமது மரபில் உள்ளவை அல்ல. இவையெல்லாம் வெளியில் இருந்து வந்தவையே. ஆனால் இவையெல்லாம் பயன்படுத்தி, நாம் நமது மரபார்ந்த சமையலை தான் சமைக்கிறோம். அதுபோலத்தான் தோழர்களே, பல்வேறு தொழில்நுட்பங்கள், நுணுக்கங்கள் நமது கலையில் சேர்ந்து கொண்டே இருக்கும் வரை நமது கலை என்றுமே முன்னணியில் இருக்கும். நமது கலைகளை மேம்படுத்தி அதை உலக அளவில் கொண்டு செல்வதே நமக்கும், நமது மரபுக்கும் நாம் செய்யும் பெருமையாக இருக்க முடியும். புரூஸ் லீ தன் மரபார்ந்த கலையான குங் பு வை உலகம் அறியச் செய்தது போல். அவர் குங் பு வில் பல புதிய நுணுக்கங்களை சேர்க்கும்போது, மரபார்ந்த ஆசிரியர்கள் பலரின் எதிர்ப்பை பெற்றவர்தான். ஆனால் இன்று குங் பு என்றவுடன் நமக்கு நினைவில் வரும் முதல் பெயர் புரூஸ் லீ தான். ஒரு கலை எந்த அளவுக்கு பழைய கலை என்பது நமது மரபின் பெருமையை சொல்லும், ஆனால் அதில் சேர்க்கப்படும் புதுமைகள் தான், அதை காலத்தை தாண்டி நிற்கச் செய்யும். 

<p value="<amp-fit-text layout="fixed-height" min-font-size="6" max-font-size="72" height="80">

Rajinikanth J

September 11, 2020

கலையின் கணம்

நண்பர்களே ஒரு கலையை தொடர்ந்து உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் சிலகணங்கள் அமைவதுண்டு. அதை கலைக்கணம் என்று சொல்லலாம். சமீபத்தில் எழுத்தாளர் அசோகமித்திரன் அவர்களின் புலிக்கலைஞன் என்ற ஒரு கதை படித்தேன். அந்த கதையில் டகர் பாயிட் காதர் என்று ஒரு கதாபாத்திரம் வரும் அந்த கதாபாத்திரம் ஒரு புலி கலைஞனாக வரும். அவர் ஒரு சினிமா கம்பெனியில் வந்து தனக்கு ஏதாவது வேடம் இருந்தால் கொடுங்கள், நான் புலிவேஷம் நன்றாக ஆடுவேன் என்று கூறி வாய்ப்பு கேட்பார். அவருக்கு டைகர் பைட் (Tiger fight) என்று கூட சரியாக சொல்ல தெரியாது, அதை டகர் பாயிட் என்று தான் சொல்லுவார். அவர் தன்னுடைய புலி முகமூடியை அணிந்து புலி வேடமிட்டு புலியைப் போல் செய்து காண்பிப்பார். அதை பார்ப்பவர்களுக்கு அவர் ஒரு புலியாகவே தெரிவார். பின்னர் அந்த வேடத்தை கலைத்தவுடன் அவர் தனக்கு வாய்ப்பு வேண்டி கெஞ்சும் போது அதை பார்த்துக்கொண்டிருந்த கதைசொல்லி சொல்லுவார், “இப்போது கண்கலங்கி பேசும் இவர் தான் சற்று முன்பு புலியாக இருந்தவர் என்று”. அதாவது அந்த புலிக்கலைஞன் அந்த கலையை செய்து காட்டும் போது மனிதன் அல்ல புலி தான், அவர் தன்னை புலியாக நினைத்து நடிப்பதோ, பாசாங்கு செய்வதோ அல்ல புலியாக மாறி விடுவது தான் அந்தக் கணம். அந்தக் கணம்தான் கலையின் கணம். ஆம் நண்பர்களே அந்த நேரத்தில் அவர் ஏழையோ, பணக்காரரோ, ஆணோ, பெண்ணோ அல்ல. அவர் எதுவாக அந்த கலையை உணர்ந்து செய்கிறாரோ அதுதான் அவர். இதேபோல், இன்னொரு ஒரு உதாரணமும் சொல்லலாம் நாசர் அவர்களின் அவதாரம் திரைப்படத்தில் கடைசியில் ஒரு காட்சி வரும். வில்லனாக நடித்த பாலா சிங் அவர்களை நாசர் கொல்ல வருவார். அவரின் அந்த நரசிம்ம அவதாரத்தை பார்த்தவுடன் வில்லனுக்கு பயம் வந்துவிடும். அந்த பயத்தை போக்க அவர் கூத்து கலையில் போடும் ஒரு மகாபாரத கதாபாத்திரத்தை அதற்குரிய பாடலை பாடி அந்த கதாபாத்திர நிலையை நோக்கி மனதளவில் செல்வார். பின்னர் அவர் நாசர் அவர்களை எதிர்பார்த்து காத்திருப்பார், பயந்து ஓட மாட்டார். கூத்துக் கலைஞர்களுக்கு இயல்பாகவே வரும் ஒரு மனநிலை அது. கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் அவர்கள் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவார்கள். எழுத்தாளர் பவா அவர்கள் சொன்னது போல மறுநாள் காலையில் வேண்டுமென்றால் அவர்கள் முதலாளியிடம் சென்று ஒரு 50 ரூபாய் போட்டு கொடுங்கள் என்று கெஞ்ச வேண்டிய நிலைமை இருந்தாலும் இருக்கும். ஆனால் எந்த பாத்திரத்தை ஏற்று அரிதாரம் பூசுகிறார்களோ, அந்த நேரத்தில் அவர்கள் அந்த ஆளுமை தான்.

இதேபோல் இன்னொரு ஒரு கணத்தையும் கலைக்கணம் என்று சொல்லலாம். அது கலையின் தரிசனத்தை அல்லது அதன் ஒரு அங்கத்தை உணரும் தருணம் என்று சொல்லலாம். நண்பர்களே நாம் ஒரு கலையை கற்கும் போது ஆரம்பத்தில் இருந்து, பல பயிற்சிகளை செய்திருப்போம். ஆனால் அந்தப் பயிற்சிகளை உடலளவில் வெறும் அசைவுகளாக தான் பல நாள் செய்து இருப்போம், சட்டென்று ஒரு நாள் அந்த பயிற்சியின் அர்த்தம் நமக்கு புரியும் அல்லது நாம் பயிற்சி செய்யும் அந்த கலையின் ஒரு தரிசனத்தை புரிந்துகொள்வோம். பல வருடங்களாக செய்யும் ஒரு பயிற்சியை நாம உணர்வதற்கு ஒரு தருணம் வரும். அந்த தருணத்தையும் கலையின் கணம் என்று சொல்லலாம். என் ஆசிரியர் வீர கலைஞர் மனோகரன் அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர், அவர் அடிக்கடி சொல்வது ஒன்று உண்டு, “நீ பயிற்சி செஞ்சுக்கிட்டே இரு, எதையும் எதிர்பார்க்காதே, பயிற்சி செய்வது மட்டும்தான் வேலை, செஞ்சுக்கிட்டே இரு, நீ செய்யறது பார்த்து கடவுளே உனக்கு தூக்கிப் போடுவாரு, அட இவன் நல்லா செய்றானே, இவனுக்கு நாம கொடுப்போம் அப்படின்னு சொல்லி அவர் தருவார்” அப்படின்னு சொல்லுவார். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை கடவுள் தருவார் என்று என் ஆசிரியர் சொன்னதை, என் பயிற்சியின் மூலம் மூளை சட்டென்று ஒருநாள் உணர்ந்து கொள்ளும் என்று நான் நினைக்கிறேன். எந்த கலையையும் உள்ளார்ந்து பயிற்சி செய்தால், கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ அந்த கலையின் ஞானம் அவருக்கு வந்து சேரும் அல்லவா. அதே போல் நான் சண்டை பயிற்சியில் மூத்த மாணவர்களிடம் அடி வாங்கும் போது என் ஆசிரியர் “கண் கொண்டு பாருய்யா ” என்று பல தடவை கூறியும் புரியாது. திரு திரு வென்று முழித்து விட்டு கண்ணு திறந்து தான் வச்சிருக்கேன் என்று மனதுக்குள் கூறிக்கொள்வேன். ஆனால் அவரின் அறிவுரைக்கேற்ப கற்பனை சண்டையில் என் அசைவுகளை கவனித்து செய்ய ஆரம்பித்தபின் சண்டை பயிற்சியில் எதிரில் இருப்பவரின் அசைவுகள் கண்ணில் தெரிய ஆரம்பிக்கும். ஆம், கலையின் தரிசனத்தை அறியும் கணமும், அதை உள்ளார்ந்து உணர்ந்து செய்யும் கணமும் கலையின் கணம் தான்.

புரூஸ் லீ

புரூஸ் லீ

வீரக்கலை கற்பவர்கள் யாராக இருந்தாலும் அல்லது சண்டை காட்சிகள் நிறைந்த படங்களை விரும்பி பார்ப்பவராக இருந்தாலும் அவர்கள் கட்டாயம் விரும்பக் கூடிய ஒரு ஹீரோ புரூஸ் லீ. 5 படங்களில்  மட்டுமே  நடித்திருந்தாலும், வீர கலை உலகில் இன்று வரை தன்னிகரற்று விளங்கும் ஒரே வீரர் அவர் என்றே சொல்லலாம். புரூஸ் லீ நடித்த படம் பார்க்கும் அனைவருக்கும் வீரக்கலை கற்கும் ஆசை வந்து விடும். சிறு வயதில் என் தந்தை சீன சண்டை படங்களுக்கு பெரும்பாலும் அழைத்து சென்று விடுவார். சண்டை கனவுகளிலேயே சிறு வயது கடந்தது. என்னை பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் தான் அருகிலிருக்கும் கராத்தே பள்ளியில் சேர்த்து விட்டார். கற்க ஆரம்பித்தது கராத்தே தான், ஆனால் அதிகம் பேசியது குங்பூ படங்களை பற்றி தான். இன்றும் நண்பர்களுடன் சினிமா கதாநாயகர்கள் வரிசையில் யார் சிறந்த வீரக்கலை நிபுணர் என்ற பேச்சு வந்தால் அதில் புரூஸ் லீக்கு முதலிடம் என்பதை அனைவரும் ஏற்று கொள்வார்கள். அடுத்த இடம் யார் என்பதில் தான் விவாதம் ஆரம்பிக்கும்.  இது வரை வந்த திரைப்படங்களில் கூட புரூஸ் லீ அளவுக்கு தொழில் நுட்பங்களை மன ஒருமையுடன் செய்தவர் யாருமில்லை என்று தான் நினைக்கிறேன். அவர் அளவுக்கு நேர்த்தியுடன் செய்பவர் இருக்கலாம், பல நூறு விதமான தாக்குதல் மற்றும் தடுக்கும் முறைகளை காட்டியவர்கள் இருக்கலாம். ஜெட் லீ, ஜாக்கி சான், டோனி யென், ஸ்டிவன் சீகல், சக் நாரிஸ், சமோ அங் , யூஎன் பயோ  என அதன் வரிசை நீளும். ஆனால் தான் செய்யும் அசைவுகளில் முழு மன ஒருமையுடன் கூடிய சீற்றமும் அதில் வெளிப்படும் வேகமும், ஆதனால் உருவாகக்கூடிய அசுர பலமும் புரூஸ் லீயிடம் மட்டுமே இன்று வரை சாத்தியம். புரூஸ்லீக்கு பிறகு பல கதாநாயகர்கள் அவரைப் போலவே சீற்றத்துடன் அதே உடல்மொழியில் நடிக்கும் முயன்று தோற்ற படங்கள் பல உண்டு இதை ஜாக்கிசான் அவரே ஒரு பேட்டியில் கூறி, பின்னர் தனக்கு வராது என்று நகைச்சுவையோடு கலந்த சண்டை நுட்பங்களை தன் படங்களில் புகுத்த ஆரம்பித்ததாக சொல்லியிருப்பார். அப்படி என்ன புரூஸ் லீக்கு தனி சிறப்பு? அது அவருடைய சண்டைக்காட்சிகளில் வெளிப்படும் நேர்த்தியான நுட்பம், அசாத்திய வேகம், அசுர பலம், இதுமட்டுமல்லாமல் சண்டைக்காட்சிகளில் உணர்வுகளை வெளிப்படுத்தி நடிக்க கூடியவரும் அவர் ஒருவர்தான். இது மட்டுமா புரூஸ் லீயின் சிறப்பு? திரைப்படங்களை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் அவர் ஒரு சிறந்த வீரக்கலை நிபுணர். அவர் காட்டியது 5 படங்களில் பெரும்பாலும் அடிப்படை நுட்பங்கள் தான். அதிலும் ஐந்தாவது படத்தில் முக்கியமான சண்டைக் காட்சிகளில் மட்டும்தான் நடித்திருப்பார் மீதி படத்தை முடிக்கும் முன்னரே அவர் இறந்து விட்டார். அவருடைய இழப்பு இன்றுவரை ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு தான். சரி, புரூஸ் லீயின் திறமைகளை எனக்கு தெரிந்த வகையில் கூற முயல்கிறேன்.

முக்கியமானது புரூஸ் லீயின் நேர்த்தியான நுட்பம். எந்த ஒரு நுட்பத்தை செய்தாலும் அதை மிக நேர்த்தியாக செய்யக்கூடியவர் புரூஸ்லி. நேர்த்தி என்றால் ஆங்கிலத்தில் பெர்பெக்ஷன் (perfection) என்று சொல்வார்கள். அந்த வார்த்தைக்கு உண்மையில் ஒரு முடிவே கிடையாது. அது சென்றுகொண்டே இருக்கும். இதுதான் கடைசி என்று சொல்லக்கூடிய ஒரு அடிப்படை அதற்குக் கிடையாது. நீங்கள் செய்ய செய்ய நீங்கள் செய்யும் நுட்பத்தின் நேர்த்தி வளர்ந்துகொண்டே இருக்கும். அதை புறவயமாக நம்மால் வார்த்தையால் சொல்ல முடியாவிட்டாலும் அகவயமாக நம்மால் கண்டிப்பாக உணர முடியும். அதை நிரம்பப் பெற்றவர் புரூஸ்லி. வீரக்கலை பயில்பவர்களுக்கு ஒன்று தெரியும் நாம் செய்யும் நுட்பத்தில் நேர்த்தி வந்தாலே வேகம் வந்துவிடும், ஏனென்றால் நேர்த்தி என்பதே எந்தவித வேறு வகையான அசைவுகள் இல்லாமல், செய்யும் தொழில்நுட்பத்தை நேராக அதனுடைய வழியில் சுருக்கமாக செய்வது என்று நாம் சொல்லலாம். அப்படி வந்து விட்டால் நிச்சயம் செய்ய செய்ய நுட்பத்தில் வேகம் கூடும் வேகமும் வந்தால் பலம் தன்னைப் போல் வந்துவிடும். அதன் காரணமாகவே புரூஸ் லீக்கு ஒரு அசுர பலம் அசாத்திய வேகமும் அவருடைய நுட்பத்தில் வந்து சேர்ந்துவிடுகிறது. அதற்கு முக்கியமான காரணம் அவருடைய நேர்த்தி என்றே சொல்லலாம். அந்த நேர்த்திக்கு காரணம் அவரின் அயராத பயிற்சி. அது மட்டுமல்லாமல் சினிமாவுலகில் சண்டைக்காட்சிகளில் உணர்வுகளை வெளிப் படுத்தியவர் அவர்தான். அவரளவுக்கு சீற்றம் கொண்டு சண்டையிடுவது மற்ற ஹீரோக்களுக்கு இயலாத ஒன்றாகவே எனக்கு தெரிகிறது. அந்த மன ஒருமையின் காரணமாக அந்த நுட்பத்தின் ஒவ்வொரு அசைவும் அவருடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும் குறிப்பாக என்டர் தி டிராகன் (Enter the dragon) என்ற திரைப்படத்தில் அவர் ஒரு வீரக்கலை போட்டியில் கலந்து கொண்டு செய்யும் ஒரு சண்டை. அந்த படத்தில் அது இரண்டாவது சண்டை. அதேபோல் இன்னொரு சண்டை பிஸ்ட் ஆப் பியூரி (Fist of fury) என்ற திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். அது அவர் ஒரு கராத்தே பள்ளிக்குள் சென்று அங்கு உள்ள மாணவர்களை அடிக்கும் ஒரு சண்டை காட்சி. அதை மிக அனாவசியமாக செய்து இருப்பார். கேமரா மேலே இருந்து எடுக்கப் பட்டிருக்கும் அந்த காட்சியில் அவர் சுற்றி சுற்றி அனைவரையும் அடிக்கும் விதம் அன்றைக்கு வெளிவந்த சண்டை படங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது என்று சொல்லலாம். அந்த படத்தில் உள்ள அனைத்து சண்டை காட்சிகளும் படத்தின் தலைப்புக்கு ஏற்ப மிகுந்த சீற்றத்துடன் இருக்கும். ஒவ்வொரு படத்தை பற்றியும் அதில் உள்ள நுட்பங்களை பற்றியும் தனித்தனி கட்டுரைகளாவே எழுதலாம்.

குங்ஃபூ என்று சொல்லப்படும் சீன கலையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும் புரூஸ் லீ தான். அவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் இருந்தார். ஆனால் மரபார்ந்த ஆசிரியர்களை தாண்டி சிந்தித்தது அவர் மனம், பல புதிய நுட்பங்களை சேர்த்துக் கொண்டே இருந்தார். அது மரபார்ந்த கலையாக மட்டுமே பார்க்கும் பெரும்பான்மையான ஆசிரியர்களுக்கு கசப்பாகவே இருந்தது. ஆனால் வளராமல் தேங்கி நிற்கும் ஒரு கலை சிறுகச்சிறுக அழியத் தொடங்கும் என்பதே உண்மை. பல தற்காப்பு கலைகளில் உள்ள பல சிறந்த நுட்பங்களை சேர்க்க நினைத்தார். அதற்காக அவர் உருவாக்கிய ஒரு வழிமுறைதான் ஜீட் குன் டோ (Jeet Kwon Do). இதை பொதுவாக எல்லோருமே ஒரு தனியான தற்காப்பு கலை என்று சொல்வார்கள். எனக்கு அப்படி சொல்வதில் உடன்பாடு இல்லை அதை ஒரு சண்டை செய்யும் முறை என்று தான் அவரே சொன்னார். அதாவது ஸ்டைல் ஆப் நோ ஸ்டைல் (Style of no style) என்பதுதான் ஜீட் குன் டோ வின் சண்டை செய்யும் முறையாக புரூஸ்லி சொல்லியிருந்தார். அதை ” முறைகளற்ற முறை” என்று சொல்லலாம். அதாவது நம்முடைய எதிரி எப்படி சண்டை செய்கிறாரோ அதை புரிந்து அதற்கேற்ற மாதிரி சண்டை செய்ய வேண்டும் என்பதே அதன் உட்கருத்து. ஒரு கலை என்றால் அதற்கென்று சில அடிப்படைகள் இருக்கும் பாடத்திட்டங்கள் இருக்கும் அதை ஒரு கலையாக செய்யக்கூடிய அதாவது மனம் ஒன்றி செய்யக்கூடிய பல நுட்பங்கள் வழிமுறைகளும் இருக்கும் ஆனால் புரூஸ்லி அவர்களின் ஜீட் குன் டோ என்பது கிட்டத்தட்ட பாக்ஸிங் போல ஒரு சண்டை செய்யும் முறை மட்டுமே. அதைத் தாண்டி அதில் பாடத்திட்டங்கள் என்று எதுவும் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அந்த சண்டை செய்யும் முறை என்பது பாக்சிங், கராத்தே, குங்பூ போன்ற அனைத்து தற்காப்பு முறைகளிலிருந்து சிறந்த நுட்பங்களை எடுத்துக்கொண்டு உருவாக்கியது. ஆனாலும் அவர் எப்போதும் தன்னை ஒரு குங்பூ ஆசிரியராகவே முன்வைத்தார். அதை அவர் குங்பூ மற்றும் கராத்தேவை ஒப்பிட்டு குங்பூ குத்துக்கும் கராத்தே குத்துக்கும் உள்ள வித்தியாசத்தை ஒரு காணொளியில் பேசி இருப்பதன் மூலம் அறியலாம். அவர் தான் கண்டு உணரும் சிறந்த நுட்பங்களை, மற்ற கலைகளில் உள்ள புதுமைகளை குங் பூவில் இணைத்து கொண்டு அந்த கலையை வேறு ஒரு பரிமானத்திற்கு கொண்டு செல்ல முயற்சித்தார். அவர் செய்த ஒரு கையில் அதுவும் மூன்று விரலில் தண்டால் எடுப்பது, 1 இன்ச் பஞ்ச் போன்ற விஷயங்கள் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றன. இன்றும் அந்த வீடியோக்கள் யூடியூபில் கிடைக்கிறது.

இராமாயண வாலிக்கு தன் எதிரில் நின்று சண்டை செய்பவரின் பாதி பலம் அவருக்கு வந்து விடும் என்ற வரம் உள்ளது போல் புரூஸ்லீ போல தன்னபிக்கையும் மன ஒருமையும் உள்ளவர் முன் அவர் அளவுக்கவே பயிர்ச்சி உள்ளவர் மட்டும் நிற்க முடியும், இல்லையென்றால் எதிரில் நிற்பவர் விழிகளை பார்த்த உடனே தன் பலத்தில் பாதியை இழந்து விடுவார்கள்.
 

வாலி என்ற கதாபாத்திரமோ அல்லது டிராகன் எனும் சீன கற்பனை விலங்கோ வாழ்ந்ததா தெரியாது. ஆனால் தன்னை லிட்டில் டிராகன் என அழைத்துக்கொள்ள ஆசைப்பட்ட புரூஸ் லீ வாழ்ந்தார். ஆம் இன்றளவும் வீரக்கலை உலகில் அவர் ஒரு டிராகன் தான்.

Rajinikanth J

August 10, 2020

சிலம்பத்தின்-சிறப்புகள்

To read this article in English click here https://jrkanth.com/2020/12/29/silambams-specialty/

உலகமெங்கும் கம்பை வைத்து செய்யப்படும் தற்காப்பு கலைகள்  பரவலாக இருந்தாலும், தமிழர் தற்காப்பு கலையான சிலம்ப கலை  தனிச்சிறப்பு வாய்ந்த கலை  என்பது உண்மை.

ஒரு கம்பை வைத்துக்கொண்டு சண்டை செய்வது பற்றியோ அல்லது தன்னை தற்காத்து கொள்வது பற்றி உலகில் உள்ள யார் சிந்தித்தாலும் அடிப்படையில் சில அசைவுகள் மற்றும் வீச்சுகள் உருவாகி வரும். உதாரணத்திற்கு ஆயுதங்கள் எதுவும் இல்லாமல் வெறும் கை , கால்கள் மற்றும் உடலினை பயன்படுத்தி செய்யும் கலைகளான குத்துவரிசை, கராத்தே , குங் பூ என்று எடுத்துக்கொண்டால் அதில் உள்ள குத்து, வெட்டு, உதைகள், தடைகள் போன்ற நுட்பங்களில் பல ஒற்றுமைகளை காணலாம். அது போல் கம்பை கொண்டு செய்யும் பல கலைகளிலும் சில ஒற்றுமைகளை காண முடியும். வாரல், வெட்டு, குத்து போன்ற அடிப்படை நுட்பங்களை அப்படி சொல்லலாம். சரி அப்படி என்றால் சிலம்பக்கலை மற்ற கம்பை கொண்டு செய்யும் கலைகளை விட எந்த வகையில் சிறந்தது?

  1. அதன் வீச்சு முறை
  2. அதன் தனித்தன்மையான கால் மான முறைகள்
  3. எந்த திசைக்கும் கம்பை லாவகமாக திருப்ப கூடிய  அதன் பயிற்சி முறைகள்
  4. அதன் பல்வேறு வகையான அடிப்படை நுட்பங்கள்
  5. நுட்பங்களை தாண்டி உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை
  6. அதன் செவ்வியல் தன்மை.

1. வீச்சுமுறைகள்: 

பொதுவாக மற்ற கலைகளில் உள்ள பாடங்கள் மற்றும் சண்டை செய்யும் முறைகளில் ஒரு சமயத்தில் ஒரு எதிரியை மட்டும் சமாளிக்கும் முறையில் வடிவமைக்க பட்டிருக்கும் மேலதிகமாக இடது பக்கம் மற்றும் வலது பக்கம் அல்லது முன் மற்றும் பின்னால் உள்ள எதிரிகள் என இருவரை எதிர்கொள்ளும் வகையில் அமைந்திருக்கும். ஆனால் சிலம்பத்தில் பல வீச்சு முறைகள் உள்ளன, அது தன் முன்னாள் உள்ள அனைவரையும் அல்லது தன்னை சுற்றி உள்ள அனைவரையும் தன்னிடம் நெருங்க முடியாத வண்ணம் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு ‘கலைப்பு’ என்ற நுட்பம் தன் முன்னால் உள்ளவர்களையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் கலைக்கும் ஒரு சிறந்த நுட்ப முறை. வாரல் என்ற அடிப்படை நுட்பத்தை வேறு திசை மற்றும் வேறு கோணத்தில் செய்யப்படும் இந்த ‘கலைப்பு’ வேறு கலைகளில் காண முடியாது. இதே “கலைப்பு” நுட்பத்தை சுத்து கால் முறையில் நின்றுகொண்டு 360 டிகிரி சுற்றிப் செய்யும் முறையும் சிலம்பத்தில் சிறப்புகளில் ஒன்று. அதே போன்று இன்னொரு சிறந்த நுட்பம் தான் ‘வீடு கட்டுதல்’.

2.கால் மான முறைகள்:

பொதுவாக தமிழர்கள் தான் சண்டையில் வல்லவன் என்று சொல்வதற்கு பல சொல் ஆக்கங்களை பயன்படுத்துவார்கள். அதில் முக்கியமான ஒன்று, நான் வீடு கட்டி அடிப்பேன் என்று சொல்வது. ஆம் அந்த வார்த்தை சிலம்ப கலையில் இருந்து உருவாகி வந்தது தான். 2 வீடு, 4வீடு, 16வீடு என்று சொல்வதெல்லாம் சிலம்ப கலையில் உள்ள அதன் தனித்துவமான அதன் கால் மான முறைகளை வைத்து தான். நான் முன்னரே சொன்ன ‘வாரல்’ என்ற நுட்பம் ஒரு அருமையான தற்காப்பு நுட்பம். நாம் எந்த திசையில் வீசினாலும் அந்த திசையில் வரும் எல்லா வகையான தாக்கும் முறைகளை இது தடுக்கும் (எவ்வளவு வேகத்தில் மற்றும் எவ்வளவு பலமாக வீசுகிறோம் என்பது அவரவர் பயிற்சியை பொறுத்தது). இந்த ‘வாரல்’ நுட்பம் தான் வீடு கட்டும் கால் மாணத்தில் மிக அதிகமாக செய்யப்படும் நுட்பம். கால்களை ‘X’ வடிவத்தில் இங்கும் அங்குமாக திரும்பி செய்யப்படும் இந்த நுட்பத்தில் இந்த ‘வாரல்” நுட்பம் வீச்சாக மாறி அதன் பலத்தை மற்றும் வேகத்தை பெருக்கி கொள்ளும். நான்கு வீடு நான்கு (16வீடு) என்று சொல்லப்படும் நுட்பம் நம்மை 4 திசைகளில் இருக்கும் எதிரிகளிடம் இருந்து காக்கும். இந்த நுட்பமும் மற்ற கலைகளில் இல்லாதது. அதே போல் “உடான்”, “கிரிக்கி”, “துள்ளி வருதல்” போன்ற நுட்பங்களில் உள்ள கால் மான முறைகளும் மற்ற கலைகளில் இல்லாத ஒன்று.

3.கம்பை லாவகமாக திருப்ப கூடிய முறைகள்:

பொதுவாக கம்பை முன்னும் பின்னுமாக, இரண்டு திசைகளுக்கு மட்டும் மாற்றி செய்யப்படும் பாடங்கள் தான் பெரும்பாலும் கம்பை வைத்து செய்யப்படும் கலைகளில் உள்ளன. ஆனால் கம்பை ஒரு திசையில் இருந்து வேறு எந்த திசைக்கும் மாற்றும் லாவகம் சிலம்ப கலையில் மட்டும் தான் உள்ளது என்று நினைக்கிறன். உலகில் புகழ்பெற்ற ஜப்பானிய மற்றும் சீன கலைகளில் கூட அப்படி மாற்றும் ஒரு அசைவை எந்த ஒரு உலக போட்டிகளிலும் கண்டதில்லை (இணையத்தில் பார்த்தவை மட்டும்). அவர்களில் ஜிம்நாஸ்டிக்ஸ் மற்றும் தாவி எழும்பும் அசைவுகள் அனைவரையும் வாய் பிளக்க வைக்கும்.ஆனால் கம்பை அதன் குறைந்தபட்ச வீச்சு உள்ள இடத்தில் அதன் திசையை மாற்றி லாவகமாக செய்வது சிலம்ப கலையின் அடிப்படை பயிற்சி முறைகளில் ஒன்று. மற்ற கலைகளில் கம்பை அப்படி வேறு திசைகளுக்கு மாற்றுவது என்றாலும் அதன் அசைவை ஏதேனும் ஒரு நுட்பத்தில் நிறுத்தி பின்னர் வேறு திசைக்கு திரும்பி செய்வது போன்ற பாட முறையில் தான் உள்ளது.கம்பின் அசைவை நிறுத்தாமல் அதன் போக்கிலேயே வேறு திசைக்கு மாற்றும் நுட்பம் சிலம்ப கலையின் சிறப்பு என்றே கருதுகிறேன். இந்தியாவில் கம்பை வைத்து செய்யப்படும் பிற கலைகளான “கத்தி சமு” அல்லது ‘கார சமு” (ஆந்திரா) என்று சொல்லப்படும் கலையாக இருந்தாலும் சரி, “லத்தி கேளா” என்று வங்காளத்தில் செய்யப்படும் கலையாக இருந்தாலும் சரி சிலம்ப கலை அளவிற்கு முழுமை பெறாததாகவே உள்ளது. குறைந்த பட்சம் நான்கு வீடு நான்கு கூட அவர்கள் செய்யதில்லை. அதிகபட்சம் 2 அல்லது 3 திசைகள் செய்வதோடு நிறுத்திக்கொள்கிறார்கள். மேலும் அந்த கலைகளில் நெடுங்கம்பை விட அலங்கார கலை என்று சொல்லப்படும் நடுக்கம்பு அதிகமாக செய்யப்படுகிறது.

4.பல்வேறு வகையான அடிப்படை நுட்பங்கள்:

“வாரல்” “வெட்டு” என்ற அடிப்படை நுட்பங்கள் எல்லா கலைகளுக்கும் பொதுவானவை. ஆனால் “பகுல் – வலது / இடது”, “கிரிக்கி”, “கலைப்பு”, “தலை மானம்”, “துள்ளி வருதல்”, “மேல் வீச்சு”, “கீழ் வீச்சு” போன்ற அடிப்படை நுட்பங்கள் சிலம்ப கலையில் மட்டுமே உள்ளன. “மேல் வீச்சு”, கீழ் வீச்சு” என்பது “வாரல்”, “வெட்டு” போல் தோள்களுக்கு நெருக்கமாக வீசாமல் அகன்று வீச கூடியது. குறிப்பாக வீச்சு முறைகளிலும் நாகம் 16 பாட வகைகளில் அதிகமாக வர கூடியது.

5.உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை

பொதுவாக எந்த வீர கலையிலும் உணர்வுகளை முகத்திலோ அல்லது உடல் மொழியிலோ  வெளிப்படுத்தும் தன்மைகள் இருக்காது. அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது எதிரி நம் மனநிலையை அறிந்து விட கூடும் என்பது தான். அது ஒரு வகையில் உண்மை தான். ஆனால் திறம்பட பயிற்சி செய்த ஒருவரின் தன்னம்பிக்கையை அவரின் கண்களிலும், உடல் அசைவிலும் இயல்பாகவே கண்டு கொள்ளமுடியும். இராமாயணத்தில் வாலிக்கு தன் எதிரே நின்று சண்டையிடும் நபரின் பாதி பலம் வந்துவிடும் என்று ஒரு வரம் உள்ளதாக சொல்வார்கள். அப்படி ஒரு வரம் வாலிக்கு உண்மையிலேயே இருந்ததா என்று தெரியாது ஆனால் உண்மையிலேயே நன்றாக பயிற்சி செய்த ஒரு வீரன் முன் நின்றால் அவரின் தன்னம்பிக்கையும், அசைவுகளும் எதிரே நிற்பவர் மனதில் ஒரு பயத்தை உண்டாக்கும் அந்த பயம் அவருடைய பாதி திறமையை குறைத்து விடும்  என்பது உண்மை.  அந்தவகையில் சிலம்பக் கலையில்  அப்படி பயிற்சி செய்தவரின் அளவை காட்டுவதற்கு என்றே இருப்பது தான் சிலம்பத்தில் உள்ள “பாவ்லா” முறை. சண்டை போட இருக்கும் இரண்டு நபர்களும்  ஒரு முழு வட்டம் அடித்து இந்த “பாவ்லா” செய்வதை ஒரு மரபாகவே பயிற்சி செய்வார்கள். இதை தாண்டி தன் தன்னம்பிக்கையை வெளிப்படுத்த அல்லது எதிரியை மிரள வைக்க தொடை தட்டி செய்வது, முண்டா அடிப்பது, சண்டையின் நடுவிலே கூட தன் உடலின் ஏதேனும் ஒரு பாகத்தில் தட்டி சத்தம் எழுப்பி எதிரியை குழப்புவது, சட்டென்று துள்ளி முன் செல்வது, “சறுக்கி” நுட்பத்தில் இறங்கி உடனே முன் எழுவது என பல நுணுக்கங்கள் உண்டு.

6.செவ்வியல் தன்மை

பொதுவாகவே வீரக் கலையின் பாட முறைகள் அனைத்துமே கற்பனை சண்டைதான். ஒவ்வொரு திசையிலும் நம்மை தாக்க வருபவர் இப்படி அடிக்கிறார், அதை எப்படி எங்கு தடுக்கிறோம் மீண்டும் நாம் எப்படி தாக்குகிறோம் என்று அடிபடையில் தான் அனைத்து பாடங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கற்பனைகளை அடிப்படையாக வைத்துதான் ஒவ்வொரு ஆசிரியரும் தன் கற்பனைக்கு ஏற்றபடி பாடத்தில் மாற்றம் செய்கின்றனர். அதேபோல் சிலம்ப கலையில் உள்ள பாடங்களும் கற்பனை திறன் கொண்டவை அந்தப் பாடங்களில் உள்ள எண்ணற்ற சாத்தியங்கள், அதை ஒவ்வொரு ஆசிரியரும் மேலும் மேலும்  மெருகேற்றி தன் மாணவர்களை கொண்டு வெவ்வேறு முறையில் பயிற்சி அளிக்கின்றனர். ஆனால் அப்படி மாற்றப்படும்போது நம் விருப்பப்படி கண்டபடி மாற்ற முடியாது தற்காப்பின் அடிப்படைகளைக் கொண்டு நாம் மாற்றும் பாடம் அடிப்படை மாணவர்கள் பயிற்சி செய்யும் பாடமா அல்லது முதிர்ச்சி அடைந்த மாணவர்கள் பயிற்சி செய்யும் பாடமா என்பதைக் கொண்டு அதற்கேற்றபடி மாற்றப்படும்.  அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட ஒரு மேம்படுத்தப்பட்ட பாடத்தை எல்லோரும் பார்த்து ரசிக்க முடியாது. பொதுவாக பொதுமக்கள் சிலம்பக்கலை செய்யும் போது அதன் வேகம் மற்றும் வீச்சு முறையை பார்த்த பிரமிப்பு அடைவர். ஆனால் அந்த கலையை சற்றேனும் அறிந்தவர் தான் அந்தப் பாடத்தில் உள்ள நுணுக்கங்களை ரசிக்க முடியும் ஒருவர் செய்வதற்கும் மற்றவர் செய்வதற்கும், யார் அந்தப் பாடத்தில் கவனத்தை ஊன்றி எதிரியை உணர்ந்து நிஜமாகவே அங்கே ஒரு சண்டை நடப்பது போல உணர்ந்து செய்கிறார் என்பதை பார்க்க தெரிந்தால் மட்டுமே ரசிக்க முடியும். இந்த சாத்தியங்களால் தான் இது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. ஆனால் பொதுவாக சிலம்பத்தின் அடிப்படைகள் ஒன்றுதான் ஆனால் ஒவ்வொரு ஆசிரியரும் அல்லது ஒவ்வொரு வட்டாரத்திலும், தன் கற்பனைக்கு ஏற்ப குறவஞ்சி, சார்பட்டா, நாகம் 16, கதம்பம், கள்ளபத்து என பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படுகிறது. சிலம்பத்தில் உள்ள பரந்த அடிப்படை நுட்பங்களும் அதை பல விதங்களில் இணைக்கும் அதன் எண்ணற்ற சாத்தியங்களும் அதன் அடிப்படையில் உருவான பல பரிமாணங்களும் தான் இந்த கலையை தொன்றுதொட்டு இன்றுவரை அழியாமல் காத்து நிற்கிறது, இனி மேலும் காத்து நிற்கும் என்றே சொல்லலாம்.

சிலம்பம் – அடிப்படை நுட்பங்கள்(Silambam – Basic Techniques)

சிலம்பம் – அடிப்படை நுட்பங்கள் (Silambam – Basic Techniques)

கால் மானம் (Kaal maanam): Leg movements

  1. ஒத்த கால் மானம் (Otha kaal maanam)
  2.  2 வீடு கால் மானம் (Irandu veedu kaal maanam)
  3. 4 வீடு கால் மானம் (Naangu veedu kaal maanam)
  4.  4 வீடு 4 – கால் மானம் (Naangu veedu naangu kaal maanam)
  5. அரை உடான் (Arai Vudaan)
  6. உடான் (Vudaan) – முன் (Mun) / பின் (Pin) / வலது (Valathu) / இடது (Idathu)
  7. 4 வீடு 4 – உடான் (Naangu veedu naangu udaan)
  8. சறுக்கி (Saruki)
  9. கிரிக்கி (Kiruki)
  10. துள்ளி வருதல் (Thulli varuthal)

கம்பு பிடி (Kambu pidi): Stick grip names

  1. நெடுங்கம்புப்பிடி (Nedunkambu pidi) / 2 கை தூரப்பிடி (Irandu kai thoorapidi)
  2. படைவீச்சுப்பிடி (Padaiveechu pidi) / ஓரப்பிடி (Orapidi)
  3. நடுங்கம்புப்பிடி (Nadunkambu pidi) / நடுப்பிடி (Nadupidi)

நெடுங்கம்பு அடிப்படை நுட்பம் (Nedun kambu adipadai nutpam): Long stick basic techniques.

  1. வாரல் (Vaaral)
  2. வெட்டு (Vettu)
  3. குத்து (Kuthu)
  4. பகுல் – வலது / இடது (Bagul – valathu / idathu)
  5. பின் சுத்து (Pin suthu)
  6. தலை மானம் (Thalai maanam)
  7. கிரிக்கி (Kiriki)
  8.  1/2 உடான் (Arai Vudaan)
  9. உடான் (Vudaan) – முன் (Mun) / பின் (Pin) / வலது (Valathu) / இடது (Idathu)
  10.  மேல் வீச்சு (Male veechu)
  11.  கீழ் வீச்சு (Keel veechu)
  12.  2 வீடு (Irandu veedu)
  13.  4 வீடு (Nangu veedu)
  14.  4 வீடு 4 (Nangu veedu naalu)
  15.  4 வீடு 4 vudaan (Nangu veedu naalu vudaan)
  16.  கலைப்பு (Kalaippu)

நடுங்கம்பு  அடிப்படை நுட்பம் (Nadunkambu adipadai nutpam): Centre stick basic techniques.

  1. நடு வெட்டு (Nadu vettu)
  2. நடு  வாரல் (Nadu vaaral)
  3. இருபக்க வெட்டு (Irupakka vettu)
  4. இருபக்க வாரல் (Irupakka vaaral)
  5. நடு முழு சுத்து (Nadu muzhu suthu)
  6. 2 வீடு நடுங்கம்பு (Irandu veedu nadungkambu)
  7. நடு பகுல் (Nadu bagul)
  8. 4 வீடு நடுங்கம்பு (Naangu veedu nadungkambu)
  9. 4 வீடு 4 நடுங்கம்பு (Nangu veedu nangu nadungkambu)
  10. சக்கரம் (Chakkaram)
  11. முன் சக்கர சுத்து (Mun chakkara suthu)
  12. முழு சக்கர சுத்து (Muzhu chakkara suthu)
  13. முழு சக்கர மேல் சுத்து
  14. தலை சக்கரம் (Thalai chakkaram)
  15. பின் சுருட்டு (Pin suruttu)
  16. முன் சுருட்டு (Mun suruttu)
  17. சுருட்டி உடான் (Surutti Vudaan) 
  18. தலை சுத்தி வெட்டு (Thalai suthi vettu)